top of page
Post: Blog2_Post

13 ஆவது மாத பென்சன் தொகை: சுவிஸ் மக்கள் அமோக ஆதரவு!

கருத்தறியும் வாக்கெடுப்பு ஓய்வுபெறுகின்ற வயதை

66 ஆக அதிகரிக்க எதிர்ப்பு!


பாரிஸ், மார்ச், 3


தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் 12 மாதங்களுக்கு மேலதிகமாகப் 13 ஆவது மாத ஊதியம் வழங்கப்படுவது போன்று அரச ஓய்வூதியர்களுக்கும் 13 ஆவது மாத பென்சன் தொகையை வழங்குவதற்கான திட்டத்தை சுவிஸ் மக்கள் அமோகமாக ஆதரித்து (58.2%) வாக்களித்திருக்கின்றனர்.


அதேசமயம் ஓய்வு பெறுகின்ற வயதை 65 இல் இருந்து 66 ஆக அதிகரிக்கச் சம்மதம் கோரி நடத்தப்பட்ட மற்றொரு வாக்கெடுப்பில்

பெரும்பான்மையானோர் (75%) அதனைத் தெளிவாக எதிர்த்து வாக்களித்து நிராகரித்துள்ளனர்.


நாட்டின் ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பதற்காக இரண்டு வெவ்வேறு கருத்தறியும் வாக்கெடுப்பு கள் இன்று ஞாயிற்றுக்கிழமை சகல கன்ரன் பிராந்தியங்களிலும் நடத்தப்பட்டிருக்கிறது. விலைவாசி உயர்வு, அதிகரித்துவருகின்ற வாழ்க்கைச் செலவு என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் மூதாளர் களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு - அவர்களுக்குப் மேலதிக ஒருமாத - 13 ஆவது மாத பென்சன் - கொடுப்பனவை வழங்குவதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த சுவிஸ் தொழிற் சங்க சம்மேளனம்(Swiss Trade Union Federation) அழைப்பு விடுத்திருந்தது. நாட்டு மக்களில் சுமார் 60 வீதம் பேர்  (58.2%) அதற்கு ஆதரவாக "ஆம்" (Yes ) என்று வாக்களித்துள்ளனர்.


சுவிற்சர்லாந்தில் சராசரி மாதாந்த அரச ஓய்வூதியம் 2,550 ஈரோக்கள் ஆகும். ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்வைக் கொண்டு நடத்துவதற்கு இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று பலரும் கூறுகின்றனர்.


சுவிற்சர்லாந்தில் வாழ்க்கைச் செலவு குறிப்பாக ஜெனீவா, சூரிச் போன்ற நகரங்களில் உலகிலேயே மிக அதிகமாகும். தொழிலாளர்களும் ஓய்வூதியர்களும் செலுத்த வேண்டிய சுகாதாரக் காப்பீட்டுத் தொகைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. அதனைச் செலுத்துவதற்கு ஓய்வூதியர்கள் பெரும் சிரமப்பட நேர்கின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

03-03-2024


0 comments

Kommentare

Kommentare konnten nicht geladen werden
Es gab ein technisches Problem. Verbinde dich erneut oder aktualisiere die Seite.

You can support my work

bottom of page