ஹிஸ்புல்லா தலைவரது
படுகொலைக்குப் பதிலடி!
தரைவழிப் போரை அடுத்து
லெபனானில் குழப்ப நிலை
பாரிஸ், ஒக்ரோபர் 2
ஈரான் இஸ்ரேல் மீது ஒரு தொகுதி ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. தலைநகர் ரெல்அவிவ் உட்படப் பல இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. ஈரானின் தாக்குதல் நடப்பதற்குச் சில மணி நேரம் முன்னராக அது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது. அதனால் தாக்குதலை எதிர்பார்த்துச் சிவிலியன்கள் முன்கூட்டியே நிலத்தடி அறைகளுக்கு நகர்த்தப்பட்டிருந்தனர்.
தாக்குதலை அடுத்து இஸ்ரேலிய வான் பரப்பு சில மணி நேரம் மூடப்பட்டது. சிவில் விமானங்கள் வேறு இடங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டன. தலைநகரில் சைரன் ஒலி இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது.
ஈரான் ஏவிய சுமார் 180 பாலிஸ்ரிக் ஏவுகணைகளில்(ballistic missiles) பெரும்பாலானவற்றை வழிமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. அதேசமயம் அமெரிக்கக் கடற்படையின் இரண்டு நாசகாரிக் கப்பல்களில் இருந்தும் ஈரானிய ஏவுகணைகளைத் தடுத்து அழிக்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று பென்ரகன் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேலியப் படைகள் லெபனானின் தென் பகுதியில் தரைவழியான போரை ஆரம்பித்துள்ளன. அங்கு முன்னேறி வருகின்ற இஸ்ரேலியப் படைகளுடன் லெபனான் அரசுப் படையினரும் ஹிஸ்புல்லா இயக்க வீரர்களும்
கடும் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
காஸாவைத் தொடர்ந்து லெபனான் நாட்டையும் தரைவழியாக ஆக்கிரமிப்பிற்கு இஸ்ரேல் முயன்று வருவது ஈரானிய ஆட்சியாளர்களைச் சீற்றமடையச் செய்துள்ளது. அதேசமயம் ஈரானின் நெருங்கிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் இஸ்ரேலிய வான் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட சம்பவம் பதில் நடவடிக்கையில் இறங்க வேண்டிய அழுத்தத்தைத் ஈரான் மீது ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலைக்கான பதிலடியே இன்றைய ஏவுகணைத் தாக்குதல் என்று தெஹ்ரான் அறிவித்திருக்கிறது.
ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன்
(Massoud Pezeshkian) இன்றைய தாக்குதலை நியாயப்படுத்தியிருப்பதுடன் அடுத்தகட்டம் மிகத் தீவிரமானதாக இருக்கும் என்றும் இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானுக்குள் தரைவழியாக நுழைந்திருப்பதை அடுத்துத் தலைநகர் பெய்ரூட்டில் பெரும் பதற்றமும் குழப்பமுமான நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. வெளிநாடுகள் அங்குள்ள தமது குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான
நடவடிக்கைகளைத் தயார் செய்து வருகின்றன. பிரான்ஸ் அதன் கடற்படைக் கப்பல் ஒன்றை லெபனானை அண்டிய கடற்பரப்புக்கு
நகர்த்தியுள்ளது.
⚫தொடர்புடைய செய்தி :https://www.thasnews.com/post/30-ஆண-ட-கள-மற-ந-த-வ-ழ-ந-த-சக-த-ம-க-க-தல-வர-நஸ-ரல-ல-மரணம-ஹ-ஸ-ப-ல-ல-வ-ன-எத-ர-க-லம-என-ன
தாஸ்நியூஸ் - பாரிஸ்
02-10-2024
Comentários