top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

"1980 களின் மன்செஸ்ரர் தேவாலயப் புகலிடவாசி.."

விராஜ் மென்டிஸ் உடல்

பிறீமன் நகரில் அடக்கம்

தமிழர் திரண்டு அஞ்சலி

படம் :விராஜ் மென்டிஸ் 1986 இல் ஒளிந்து வழ்ந்த தேவாலயம்..


பாரிஸ், ஓகஸ்ட் 31


கோட்பாட்டு ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் தமிழீழத்தையும் தமிழீழ மக்களை நேசித்து வாழ்ந்த பெரும்பான்மையினத்தவரான

விராஜ் மென்டிஸின்(Viraj Mendis) உடல் ஜேர்மனியில் இன்று சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.


ஜேர்மனியின் பிறீமன் நகரில் நடந்த அவரது இறுதி நிகழ்வுகளில்

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் திரண்டு வந்த புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டு அவருக்குத் தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார்கள்.

படம் :விராஜ் மென்டிஸின் உடல் வைக்கப்பட்ட பேழை மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது.


பிறீமனில் அமைந்துள்ள St Pauli church

இல் இறுதி நிகழ்வுகள் நடந்தன. இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நெதர்லாந்து, நோர்வே போன்ற நாடுகளில் இருந்துவந்த அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்படப் பெரும் எண்ணிக்கையானவர்கள் மென்டிஸின் உடலுக்குத் தங்கள் இறுதி மரியாதைச் செலுத்தினர்.


ஈழத் தமிழர்களது உரிமைகளுக்கான சர்வதேச ஆதரவைத் திரட்டுவதில் அரும்பங்காற்றிய அவரது வாழ்வைப்

பலரும் நினைவுகூர்ந்தனர்.


இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை இலங்கைக்கு வெளியே முதன்முதலாக நிறுவிய பிறீமன் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் (Permanent PeoplesTribunal) இயங்குசக்தியாக இருந்து அதன் செயற்பாடுகளை நெறிப்படுத்தியவர்

விராஜ் மென்டிஸ் ஆவார்.

68 வயதான விராஜ் மென்டிஸ் இங்கிலாந்தில் இயங்கிய புரட்சிகர கம்யூனிஸ்ட் குழுவின் (Revolutionary Communist Group) தீவிர ஆதரவாளர்.

இலங்கையின் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். இறுதிவரை தமிழர்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவந்தவர். அதேசமயம் ஐரோப்பாவில் புகலிடவாசியாக வாழ்ந்து கொண்டே அங்கு புகலிடம் மறுக்கப்படுவோர் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான

போராட்டங்களை முன்னெடுத்தவர்.

இலங்கையில் சிங்களப் பூர்வீகத்தைக் கொண்டிருந்தபோதிலும் அங்கு வாழும் சிறுபான்மைத் தமிழர்களது அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த மிகச் சிலரில் விராஜ் மென்டிஸ் குறிப்பிடக்கூடியவர். வாழ்வின் இறுதி நாட்களில் நோயுற்றிருந்த நிலையிலும் தமிழர் இனப்படுகொலை தொடர்பான விவாதங்களில் மருத்துவ ஒக்சிஜன் கழுத்தில் தொங்கிய நிலையில் பங்குபற்றியிருந்தார்.


1973 இல் பொறியியல் படிப்புக்காக மன்செஸ்ரர் (Manchester) பல்கலைக் கழகத்துக்கு ஒரு மாணவனாக வந்த மென்டிஸ், அக்காலப்பகுதியில் அங்கு கிளம்பியிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களோடு இணைந்து செயற்பட்டவர். அதனூடாக ஏதிலிகளின் நாடுகடத்தல்களைத் தடுக்கின்ற செயற்பாட்டாளராகிப் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களில் இணைந்துகொண்டார்.

படம் :உலகின் கவனத்தை ஈர்த்த மென்டிஸின் புகலிட அறை...


அகதிகளது நாடுகடத்தலைத் தடுக்க போராடி வந்த அவரை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தும் உத்தரவு 1984 இல் விடுக்கப்பட்டது. அவரது மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. நண்பர்களும் ஆதரவாளர்களும் அதற்கு எதிராகத் திரண்டு கடும் எதிர்ப்புகளில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அவர் எந்த வேளையிலும் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டார்.


அந்தக் கட்டத்தில் மன்செஸ்ரர் நகரின் மையத்தில் அமைந்துள்ள அசொன்ஷன் தேவாலயம் (Church of the Ascension in Hulme) அவருக்குப் புகலிடமளித்தது. விராஜ் மென்டிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேவாலயத்தின் தந்தை , அவருக்கு உதவினார். நாடுகடத்தலில் இருந்து தப்பிப்பதற்காக 1986 டிசெம்பர் 20 ஆம் திகதி தேவாலயத்தின் உள்ளே ஓடி ஒளிந்து அங்கேயே தங்கிக் கொண்டார்.


அன்று முதல் சுமார் இரண்டு ஆண்டுகள் - 760 நாட்கள் - தேவாலயத்தின் உள்ளேயே சிறிய அறை ஒன்றில் வசித்தவாறு அவர் முன்னெடுத்த போராட்டம் நாடு முழுவதினதும் கவனத்தை ஈர்த்தது.

இங்கிலாந்தின் குடிவரவுக் கொள்கை மீது கடும் விவாதங்களை

ஏற்படுத்தியது. தேவாலயத்துக்கு வெளியே தினமும் கூடிய ஆதரவாளர்கள் விராஜ் மென்டிஸின் நாடுகடத்தலை நிறுத்தக் கோரிக் கோஷமிட்டனர். அந்தப் பகுதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிரந்தர இடமாக மாறியது. தேவாலயம் அமைந்திருந்த தெருவுக்குப்"புகலிடம்" என்று புதுப் பெயரிடப்பட்டது.


பிரிட்டனின் தேசிய ஊடகங்கள் இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தன. அதனால் அன்றைய மார்கிரேட் தாட்சரது (Margaret Thatcher) அரசாங்கம் பெரும் சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.


எனினும் இரண்டு ஆண்டுகள் கடந்து 1989 ஜனவரி 18 ஆம் திகதி மாலை இருளும் வேளை தேவாலயத்தினுள் திடீரென நுழைந்த பொலீஸார் அங்கியிருந்து விராஜ் மென்டிஸை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டுவந்து அடுத்த 52 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தனர்.

எனினும் அடுத்த ஆண்டிலேயே அவருக்கு ஜேர்மனியின் பிறீமன் (Bremen) நகரம் புகலிடம் வழங்கியது.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தனது துணைவியான கரேனுடன்(Karen) அங்கேயே வாழ்ந்து வந்த அவர் தனது

68 ஆவது வயதில் கடந்த 16 ஆம் திகதி

காலமானார்.


பும்பெயர்வு வாழ்வின் அன்றைய ஆரம்ப காலகட்டங்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த விராஜ் மென்டிஸின் மன்செஸ்ரர் தேவாலயப் புகலிட வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூருகின்ற செய்திகளை பிரிட்டிஷ் ஊடகங்கள் அவரது மறைவுக்குப் பின்னர் வெளியிட்டிருக்கின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

31-08-2024










0 comments

Comments


You can support my work

bottom of page