top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

2024 பிரான்ஸின் பெருமை மற்றும் உறுதிப்பாட்டுக்கான ஆண்டு! - மக்ரோன்

புதுவருடச் செய்தி


பாரிஸில் பலத்த காவலுடன்

நேற்றிரவு கொண்டாட்டங்கள்


நாடெங்கும் புதுவருடக் களியாட்டங்கள் தொடங்குவதற்கு முன்னராக நேற்றிரவு

அதிபர் மக்ரோன் வழங்கிய புதுவருடச் செய்தியில், 2024 ஆம் ஆண்டு பிரான்ஸைப் பொறுத்தவரை "உறுதிப்பாட்டுக்கான வருடமாக" இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.


அதிபர் எலிஸே மாளிகையில் இருந்தவாறு நேற்றிரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சி ஊடாக நாட்டுக்கு வழங்கிய உரை சுமார் 13 நிமிடங்கள் நீடித்தது.


கடந்த ஆண்டில் மக்களது கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றிய ஓய்வூதிய மறுசீரமைப்புச் சட்டத்தை நாட்டுக்கு அவசியமானது என்று மீண்டும் கூறிய அவர், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய குடியேற்றச் சட்டத்தை மக்ரோன் தனது உரையில் ஆதரித்துப் பேசினார். "பிரெஞ்சுக் குடியரசின் கொள்கைகளை முன்னெடுப்பதற்குத்

தேவையான கருவிகள்" அந்தச் சட்டத்தில் உள்ளடங்கியுள்ளன என்றார் அவர். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராகச் சிறந்த முறையில் போராடுவதற்கும், நமது மண்ணில் தங்கியிருக்க விரும்புவோரை நம்மோடு இலகுவாக இணைத்துக் கொள்வதற்கும் அந்தச் சட்டம் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

புத்தாண்டில் நடக்கவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் நோத்த- டாம் தேவாலயத் (Notre-Dame Cathedral) திறப்புவிழா ஆகிய நிகழ்வுகளைக்

குறிப்பிட்டுப் பேசிய அவர், பிரான்ஸின் "பெருமை" மற்றும் "நம்பிக்கைக்குரிய" ஆண்டாகப் புதுவருடம் மலர்கிறது என்றார். "ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது ஒரு நூற்றாண்டில் ஒருதடவை மாத்திரம் நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு, ஒரு தேவாலயத்தைக் கட்டித் திறப்பது

என்பதும் ஆயிரம் வருடங்களில் ஒருதடவையே நடக்கக் கூடியது" எனக் குறிப்பிட்டார்.


பூகோள அரசியல் பதற்றத்தைச் குறிப்பிட்டுப் பேசிய அவர், தற்போது நீடித்துவருகின்ற உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் - காஸா மோதல்கள் என்பன கடந்து செல்லும் ஆண்டின்

போர்கள் என்றார். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்த அவர், ஹமாஸ் பிடியில் உள்ள பிரெஞ்சுக் குடிமக்கள் மூவரது குடும்பங்களை நினைவு கூர்ந்ததுடன், அவர்களைக் கைவிட்டுவிட மாட்டோம்

என்றும் தெரிவித்தார்.


இதேவேளை, வருட இறுதிநாள் கொண்டாட்டங்களுக்காக நேற்றிரவு நாடெங்கும் 90 ஆயிரம் பொலீஸார் மற்றும் ஐயாயிரம் பாதுகாப்புப் படையினர் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். பாரிஸ் நகரில் அவென்யூ சாம்ஸ் எலிசீ பகுதியில் பல லட்சம் பேர் திரண்ட கொண்டாட்டங்கள்

பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி

நடைபெற்றன. கண்கவர் வாண வேடிக்கைகள் நள்ளிரவு நேரம் பாரிஸ் வான்பரப்பை ஒளிவெள்ளமாக மாற்றியிருந்தன. நகரில் ஆங்காங்கே தெருக் களியாட்டங்கள் விடிய விடிய நடைபெற்றதையும் காணமுடிந்தது.


புதுவருடக் கொண்டாட்டங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையான குற்றச் சம்பவங்களே இடம்பெற்றுள்ளன என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா இன்று அதிகாலை தெரிவித்திருக்கிறார். முதல் கைதுச் சம்பவம் பாரிஸ் நகரத்திலேயே இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இந்தச் செய்தியை எழுதும் வரை நாடெங்கும் புதுவருட வன்செயல்களில் குறைந்தது 69 பேர்வரையே கைதாகியுள்ளனர். முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும்.


பிரான்ஸில் நாடெங்கும் தாக்குதல் விழிப்பு நிலை பேணப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை அடுத்து பயங்கரவாதத் தாக்குதல் அச்சம் மிக உச்ச அளவில் உள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ் 01-01-2023




0 comments

Comments


You can support my work

bottom of page