பாரிஸ் இந்திய இல்லத்தின்
திறப்பு விழாவில் அம்பானி
பாரிஸ், ஓகஸ்ட் 1
".. பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்காக இங்கே ஒன்றுகூடியிருக்கின்ற நாங்கள் ஒரு புதிய கனவுக்கான வாசலைத் திறக்கின்றோம். அது 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவு. ஒலிம்பிக்கை இந்தியாவுக்குக் கொண்டுவருகின்ற கனவு.."
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி நிறுவப்பட்ட இந்திய இல்லத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய நீதா அம்பானி (Nita Ambani) மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
'ரிலையன்ஸ்' அறக்கட்டளை மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகின இணைந்து இந்தத் தற்காலிக இல்லத்தை பாரிஸில் நிறுவியுள்ளன. ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை அது இயங்கும்.
இந்தியாவின் பிரபல பில்லியனர் முகேஷ் அம்பானியின் துணைவியாகிய நீற்றா ரிலையன்ஸ் அறக்கட்டளையையினதும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தினதும் உறுப்பினர் ஆவார்.
பாரிஸின் புற நகரமாகிய லா வியற்( La Villette) பகுதியில் கடந்த சனிக்கிழமை ஒலிம்பிக் "இந்திய இல்லம்" திறந்து வைக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைச் சேர்ந்த 112 விளையாட்டு வீர, வீராங்கனைகள் 16 விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சாதனைகளையும் எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான அதன் திறமையையும் எடுத்துக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்தியேக இடமே இந்திய இல்லம் என்று குறிப்பிடப்படுகிறது.
இது ஒரு கலாச்சார மற்றும் விருந்தோம்பல் மையமாகச் செயல்படுகிறது,அதேசமயம் இது பார்வையாளர்களுக்கு இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையின் ஆழமான அனுபவத்தை வழங்குகிறது-என்று இல்லத்தை நிறுவிய ரிலையன்ஸ் அறக் கட்டளை (Reliance Foundation) மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்ற நல்வாய்ப்பு
இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார்.
அடுத்தடுத்து வருகின்ற ஒலிம்பிக் ஆண்டுகளில் போட்டிகளைப் பொறுப்பேற்று நடத்துவதற்காகப் பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நிற்கின்றன. சவுதி அரேபியா, எகிப்து கட்டார், இத்தாலி, டென்மார்க், இந்தோனேசியா ஹங்கேரி, கனடா போன்ற பல முக்கிய நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைக் கோருகின்றன. இந்த நாடுகளுடன் இந்தியா கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும் என்பது வெளிப்படை.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
01--08-2024
Comments