top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

25 மீற்றர் நீள ராட்சத கொன்ரெயினர் வாகனங்களை ஐரோப்பிய வீதிகளில் செலுத்த அனுமதி


வாக்கெடுப்பு வெற்றி


பாரிஸ், மார்ச், 12


அமெரிக்கா - கனடா நாடுகளில் பொருள்களை இடத்துக்கிடம் ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படுவது போன்ற பாரிய கொன்ரெயினர் வாகனங்கள் விரைவில் பிரான்ஸின் வீதிகளுக்கும்

வரவிருக்கின்றன.


அறுபதுக்கும் அதிக தொன் எடையும் 25 மீற்றர்கள் நீளமும் கொண்ட "மெகா ட்ரக்ஸ்"(“Mega-trucks”) கொள்கலன் வாகனங்களை ஐரோப்பிய ஒன்றிய

வீதிகளில் செலுத்துவதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.


ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்களிப்பில் இத்தகைய பார ஊர்திகளை அனுமதிப்பதற்கு ஆதரவாக 330 வாக்குகளும், எதிராக 207 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.


பிரேரணை முதல் வாக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து

அது ஐரோப்பியக் கவுன்சிலினால்

உறுதிப்படுத்தப்பட்ட பிறகு சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.


கொள்கலன் மற்றும் ரெய்லரை உள்ளடக்கிய - ஒரு ரெனிஸ் மைதானம் அளவுக்கு நீண்ட - இந்த வாகனங்கள்

அறுபது தொன்களுக்கு மேல் எடை கொண்டவை. நெதர்லாந்து, சுவீடன், ஜேர்மனி போன்ற சில நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. இனிமேல் அவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்துக்கும் இடையே பயணிக்க முடியும்.


பெருமளவு பொருள்களை ஏற்றிக் கொண்டு மிகக் குறைந்த நாட்களில் நீண்ட தூரத்தைக் கடக்கக் கூடிய இந்தப் பார ஊர்திகள், எரிபொருளைச் சேமித்துக் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பங்களிக்கக் கூடியவை என்று அவற்றை ஆதரிப்போர் தெரிவிக்கின்றனர்.


ஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் தற்போதைய விதிகளின் கீழ் , 18.75 மீற்றர்கள் நீளமும் நாற்பது தொன்னுக்குக் குறைந்த எடையும் கொண்ட கொன்ரெயினர் வாகனங்களே போக்குவரத்துச் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

12-03-2024

0 comments

Comentarios


You can support my work

bottom of page