ஆசிரியை புரிந்த செயலால்
பெற்றோர்கள் அதிர்ச்சியில்
தாஸ்நியூஸ் செய்திச் சேவை
பாரிஸ், நவம்பர் 1 5
பிரான்ஸைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் உடல் சுவிற்சர்லாந்தில் கார் ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தனது பிள்ளைகளைக் கொன்றுவிட்டுத் தலைமறைவான தாயார் ஒருவரது சடலமே அது என்று நம்பப்படுகிறது.
பிரான்ஸின் வட கிழக்குப் பகுதியில்
Haute-Savoie பிராந்தியத்தில் வீடு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளது உடல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. 2 மற்றும் 11 வயதுகளையுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் 13 வயதான ஒரு பெண் பிள்ளை ஆகியோரது உடல்களே கூரான ஆயுதம் ஒன்றினால் வெட்டப்பட்ட காயங்களுடன் வீட்டின் உள்ளே காணப்பட்டன.
கடைசி ஆண் குழந்தையின் தந்தையே
முதலில் உடல்களைக் கண்டு அதுபற்றிப் பொலீஸாருக்கு அறிவித்திருந்தார். குழந்தைகளுடைய தாயார் வீட்டில் இருக்கவில்லை. அவர் காணாமற்போயிருந்த நிலையில் பொலீஸார் அவரைத் தேடி வந்தனர்.
சுவிற்சர்லாந்தில் Champéry (canton of Valais) பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கார் ஒன்றைப் சோதனையிட்ட பொலீஸார் உள்ளே பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்டுபிடித்தனர். அந்தக் கார் குழந்தைகளது தாயாருடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் வசித்துவந்த Taninges (Haute-Savoie) என்ற நகரம் ஜெனீவாவில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தூரத்தில் பிரான்ஸின் கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. அமைதியான குடும்பத்தில் நிகழ்ந்துள்ள இந்தக் கொடூரச்சம்பவம் அந்த நகர மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிராங்கோ - சுவிஸ் பூர்வீகத்தைக் கொண்டவர் என்று கூறப்படுகின்ற பிள்ளைகளின் தாயார் ஓர் ஆசிரியர் என்றும் சொந்தக் கிராமத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள்-மாணவர்கள் மத்தியில் விரும்பி மதிக்கப்பட்ட ஒருவர் என்றும் உள்ளூர் செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆயினும் சமீப காலமாக அவர் கடும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்படுகிறது.
பிள்ளைகள் கொல்லப்பட்டமைக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. குடும்பப் பிணக்குகள் வன்முறைகளில் இவ்வாறு ஏதும் அறியாக் குழந்தைகள் பலியாக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றன.
மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை தொடர்பான விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
15-11-2024
Comments