top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

3 வயதுக்குக் கீழே குழந்தைகளுக்கு டிஜிட்டல் சாதனங்கள் தடை ! 11 வயதுக்கு முதல் ஸ்மார்ட் போன் வேண்டாம்!

15வயதை எட்டும் வரை

சமூக ஊடக தளங்களை

பாவிக்கவும் கட்டுப்பாடு


நிபுணர் குழு பரிந்துரை



பாரிஸ், ஏப்ரல், 30


குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடுதிரை சாதனங்களுக்குள் மூழ்கிச் சீரழிவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை அரசுத் தலைவர் மக்ரோனிடம் சமர்ப்பித்துள்ளது.


இளவயதினரிடையே டிஜிட்டல் சாதனங்களின் பாவனை குறித்து முன்னெடுக்கக் கூடிய சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு முதல் அது தொடர்பில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள அரசு விரும்பியது.


அதற்காகப் பத்துப் பேரடங்கிய நிபுணர்கள் ஆணைக்குழு ஒன்றை அதிபர் மக்ரோன் கடந்த ஜனவரியில் அமைத்திருந்தார். அந்தக் குழுவின் அறிக்கையே தற்சமயம் வெளிவந்துள்ளது.


நூறு பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை -


மூன்று வயதுவரை குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களைத் தொட்டுப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்யப் (banning screens) பரிந்துரைத்துள்ளது. அதேசமயம்

சிறுவர்கள் பதினொரு வயதுக்கு முன்னர் ஸ்மார்ட் போன்களைப் பாவிப்பதைத் தடுக்குமாறும்

அரசுக்கு அறிவிறுத்தியுள்ளது.13 வயதில் ஸ்மார்ட் போன்களை வழங்கலாம். ஆனால் அவற்றின் மூலம் சமூக வலை ஊடகங்களை அணுகமுடியாது தடுக்கப்பட வேண்டும்.15வயதுக்குப் பிறகே சமூக ஊடகங்களின் பாவனையை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


டிஜிட்டல் தொடு திரை சாதனங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே

நேரடியானதும் மறைமுகமானதுமான

தாக்கங்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை,

தனிமை, மன அழுத்தம் போன்ற

ஆபத்தான விடயங்களின் ஆரம்ப இடமாக அவை தென்படுகின்றன என்று தெரிவிக்கிறது.


இந்த சாதனங்கள் குழந்தைகள் மத்தியில் மூளை மற்றும் நரம்பு

வளர்ச்சிக் கோளாறுகளுக்குக் காரணமல்ல என்று நம்பினாலும் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


வீடுகளிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளிகளிலும் பாலர் வகுப்புகளிலும் கணனிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களது பயன்பாட்டைத் தடை செய்யலாம்.


-அரசு இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பினாலும் அவற்றை நடைமுறையில் செயற்படுத்துவது சவாலானது. ஏனெனில் இந்த விடயத்தில் பெற்றோர்களே தனிப்பட்ட பொறுப்பைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


"ஒவ்வொரு வீடுகளுக்கும் முன்பாகப் பொலீஸ்காரர்களை நிறுத்த முடியாது. சட்டத்தின் மூலம் அன்றிப் பெற்றோர்களை வழிமுறைப் படுத்துவதன் மூலமே இதனைச் செய்ய முடியும்" என்று ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


பிரான்ஸில் 8-10 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 67 வீதமானவர்கள் சமூக வலைத் தளங்களை அணுகுகின்றனர் என்பது கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

30-04-2024

0 comments

Comments


You can support my work

bottom of page