இஸ்ரேலுக்குப் பெருவெற்றி
ஈரானின் "கவசம்" உடைந்தது
பாரிஸ், செப்ரெம்பர் 29
ஹிஸ்புல்லா இயக்கத்தைக் கடந்த முப்பது ஆண்டுகளாக வழிநடத்தி வந்த 64 வயதான தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மத்திய கிழக்கிலும் லெபனானிலும் நிலைமைகளைத் தீர்மானிக்கின்ற சக்தி மிக்க ஒரு தலைவராக விளங்கிய அவரது படுகொலையை அடுத்து இனி என்ன நடக்கும்? உலகில் அரசில்லாத ஒரு பெரும் படையைக் கொண்டிருந்த
ஹிஸ்புல்லா இயக்கத்தின் எதிர்காலம் என்ன?
இந்தக் கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன.
⚫யார் இந்த நஸ்ரல்லா?
லெபனானின் ஷியா இஸ்லாமிய இயக்கத்தின் முன்னாள் தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ், பிராந்தியத்தில் நன்கு அறியப்பட்ட மிகுந்த செல்வாக்கு மிக்க ஒரு பிரமுகர். ஹிஸ்புல்லா இயக்கத்தை இன்றைய நிலையில் பெரும் அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக வளர்த்தெடுத்தில் முக்கிய பங்கு வகித்த ஈரானுடன் தனிப்பட்ட ரீதியான நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தவர்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இராணுவப் பிரிவான ஹமாஸ், மற்றும்
ஈராக், யேமன் நாடுகளைச் சேர்ந்த பல இஸ்லாமிய ஆயுத இயக்கங்கள் நஸ்ரல்லாஹ்குவின் தலைமைத்துவ காலத்திலேயே பயிற்சிகளையும் ஈரானிடம் இருந்து ஏவுகணைகள் உட்படப் போராயுதங்களையும் பெற்றுத் தற்போதைய பலம்பொருந்திய நிலைக்கு வளர முடிந்தது.
பிராந்தியத்தில் ஈரான் தனது மேலாதிக்கத்தைச் செலுத்தவும் அதைத் தக்க வைத்திருக்கவும் நஸ்ரல்லாவே "அச்சாணியாக" விளங்கினார் என்று சில விமர்சகர்கள் வர்ணிக்கின்றனர்.
அமெரிக்கா - இஸ்ரேல் தரப்புகளிடம் இருந்து ஈரானைப் பாதுகாக்கின்ற ஒரு கவசமாகவும் ஹிஸ்புல்லாவை அவர்
வடிவமைத்திருந்தார். நஸ்ரல்லாவின் மறைவுக்கு ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேய்னி நாட்டில் ஐந்து தினங்கள் தேசிய துக்கத்தை அறிவித்திருக்கிறார்.
படம் :வான் தாக்குதல் நடந்த இடம்.
இஸ்ரேலைச் சூழ அதனைத் தாக்கும் வல்லமை கொண்ட சக்திகளை வளர்த்தெடுத்தில் நஸ்ரல்லாவின் பங்கு முக்கியமானது. லெபனானை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலியத் துருப்புக்களை எதிர்த்துப் போராடுவதற்காக நிறுவப்பட்ட ஹிஸ்புல்லாவின் பரிணாமத்தை லெபனான் இராணுவத்தை விடவும் வலிமையான படையாக மாற்றினார், லெபனானின் அரசியலில் ஒரு சக்தி வாய்ந்த மையப் புள்ளியாக விளங்கினார். இராணுவரீதியில் மாத்திரம் அன்றி சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவைகளை வழங்கும்
கட்டமைப்புகளையும் உருவாக்கினார்.
1960 இல் பிறந்த ஹசன் நஸ்ரல்லாஹ் பெய்ரூட்டின் கிழக்கு போர்ஜ் ஹம்மூத் (Bourj Hammoud) பகுதியில் வளர்ந்தார், அங்கு அவரது தந்தை அப்துல் கரீம் ஒரு சிறிய காய்கறிக் கடை நடத்தி வந்தார். அவரது ஒன்பது குழந்தைகளில் மூத்தவரே நஸ்ரல்லா.
ஹிஸ்புல்லா இயக்கத்தின் முதல் தலைவர் அப்பாஸ் - அல் - முசாவி (Abbas al-Musawi) இஸ்ரேலிய ஹெலிகொப்ரர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1992 ஆம் ஆண்டு தனது 32வது வயதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரானார் நஸ்ரல்லா.
அச்சமயம் முசாவியின் படுகொலைக்குப் பதிலடி கொடுப்பது அவரது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அவர் வடக்கு இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார், அதில் ஒரு சிறுமி கொல்லப்பட்டாள், துருக்கியில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தில் இஸ்ரேலியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கார் வெடிகுண்டால் உயிரிழந்தார், மேலும் அர்ஜென்ரீனாவின் தலைநகரமாகிய புவெனர்ஸ் அயர்ஸில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தைத் தாக்கிய தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் 29 பேரைக் கொன்றார்.
இவையே இஸ்ரேலுக்கு எதிராக நஸ்ரல்லா நடத்திய ஆரம்பகாலத் தாக்குதல்களில் சிலவாகும்.
தெற்கு லெபனானை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலியப் படைகள் 2000 ஆம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறக் காரணமான நீண்ட போரை நஸ்ரல்லாவே நிர்வகித்தார், இருப்பினும் அவரது மூத்த மகன் ஹாடி இஸ்ரேலியத் துருப்புக்களுடன் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டபோது தனிப்பட்ட இழப்பைச் சந்தித்தார்.
லெபனானில் இருந்து இஸ்ரேலை விரட்டியடித்தமையை இஸ்ரேலுக்கு எதிரான முதலாவது அரபு வெற்றி என்று நஸ்ரல்லா பிரகடனம் செய்தார்.
பெய்ரூட் நகரின் தெற்குப் புறநகரில்
அமைந்திருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் மத்திய கட்டளைத் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்திய
சக்திவாய்ந்த விமானத் தாக்குதலில் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அந்த அமைப்பு அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதைத் தெரிவிக்கவில்லை.
"தலைவர் ஹசன் நஸ்ரல்லா சக மாவீரர்களுடன் இணைந்துகொண்டார்" என்று மட்டும் ஹிஸ்புல்லா அமைப்பு அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
கொல்லப்படும் காலம் வரை - கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக - அவர் தனது இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொள்ளும்
தலைமறைவு வாழ்க்கையையே தொடர்ந்து வந்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுகளின் கண்களில் சிக்காது தப்புவதற்காக அவரைச் சுற்றிப் பல அடுக்குப் பாதுகாப்பு வளையங்கள் இயங்கின.
நஸ்ரல்லாவைச் சந்திக்கச் சென்ற செய்தியாளர்கள் மற்றும் படப்பிடிப்பாளர்கள் கடுமையான பரிசோதனைகளைத் தாண்ட வேண்டி இருந்தது. அவரது உரைகள் பெரும்பாலும் முன்னரே ஒலிப்பதிவு செய்யப்பட்டவையாக இருந்துவந்தன.
படம் :இஸ்ரேலிய வான் தாக்குதலால் பெய்ரூட் நகரம் மீது புகைமண்டலம்.
சமீப காலமாக ஹிஸ்புல்லா இயக்கத் துக்குள் எதிரியின் ஊடுருவல் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. மொசாட் மற்றும் சிஐஏ உளவாளிகளது ஊடுருவல் பற்றிய எச்சரிக்கைகள் அதன் தலைமையால் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தன என்று கூறப்படுகிறது. ஈரானியத் தலைநகரில் வைத்து ஹமாஸ் இயக்கத் தலைவர் கொல்லப்பட்ட சம்பவமும், டசின் கணக்கான ஹிஸ்புல்லாத் தளபதிகள் அடுத்தடுத்து இஸ்ரேலியத் தாக்குதல்களில் சிக்க நேர்ந்தமையும்
அதைவிட ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் கைகளில் இருந்த பேஜர் மற்றும் வோக்கி - ரோக்கிக் கருவிகள் ஒரேசமயத்தில் வெடித்துச் சிதறிய அனர்த்தமும் அந்த அமைப்பு உள்ளே பலவீனமடைந்துவருவதைப் பகிரங்கமாக்கியிருந்தன.
ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை
ஹிஸ்புல்லா இயக்கம் சந்தித்த மீள முடியாத பெரும் பின்னடைவாகக் கொள்ளப்படுகிறது. எனினும் புதியவர் ஒருவரைத் தலைமைப் பதவியில் நியமித்து இயக்கத்தை வழிநடத்த முயற்சிகள் நடந்துவருகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
29-09-2024
コメント