top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

35 வளர்ப்பு நாய்கள் புதைத்த இடத்தில் நடிகர் அலைனின் உடல் அடக்கம்

பிரெஞ்சு சினிமாவின் யுக

புருஷருக்குப் பிரியாவிடை

படங்களில் பலதடவைகள்

இறந்தவரின் நிஜ மரணம்


பாரிஸ், ஓகஸ்ட் 21


பிரெஞ்சு சினிமாவின் அடையாளம் என வர்ணிக்கப்பட்டவரான மறைந்த நடிகர் அலைன் டிலொனின்(Alain Delon) உடல் எதிர்வரும் சனிக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளது. நாடெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவரது இறுதி நிகழ்வு மிகுந்த கட்டுப்பாட்டுடன் தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக மாத்திரம் அவர் வாழ்ந்த Douchy இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இறுதிச் சடங்கு தொடர்பான விவரங்களைக் குடும்பத்தவர்கள் பகிரங்கமாக வெளியிடவில்லை.


நாட்டின் மத்திய பகுதியில் அலைன் சுமார் அரை நூற்றாண்டுகாலம் வாழ்ந்த Douchy-Montcorbon என்ற கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் இறுதி ஆராதனை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் வளர்ப்பு நாய் உட்பட அழைக்கப்பட்ட

பிரமுகர்கள் நாற்பது பேர் மாத்திரமே இறுதி நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.

மறைந்த நடிகரது விருப்பப்படி முன்னாள் ஆயர் ஒருவர் இறுதி ஆராதனையை நடத்தவுள்ளார்.

அலைன் டெலோன் தனது சாவுக்குப் பின்னர் அரச மரியாதை, தேசிய துக்கம் எதுவும் இன்றியே சாதாரணமான முறையில் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் - அதேசமயம் தனது வளர்ப்பு நாய்களின் புதைகுழிகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகே தனது உடலும் புதைக்கப்படவேண்டும் என்றும்

கேட்டிருந்தார். அதன்படி இல்லத்தின் தோட்டத்தில் அவரது 35 நாய்களின் புதைகுழிகள் அருகே அலைனின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

படம் :அலைனின் அந்திம தோழன் லூபோ..


நடிகர் அலைன் வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக பிரியம் கொண்டவர்.அவரது மரணத்தை அடுத்து விலங்குகளைப் பாதுகாக்கின்ற அமைப்புகள் வெளியிட்ட இரங்கல் செய்திகளில் பிராணிகள் மீது அளவற்ற அன்பு கொண்டு வாழ்ந்த மானிடன் என்று அவருக்குப் புகழாரம் சூட்டியிருந்தன.


பிள்ளைகளால் கைவிடப்பட்ட தனது அந்திம காலத்தை அவரது வாழ்வின் முடிவுகாலத் துணை எனக் குறிப்பிடப்படுகின்ற லூபோ(Loubo) என்ற நாயுடனேயே கழித்திருந்தார்.

தான் இறப்பதற்கு முன்னரே லூபோவும் மரணித்துவிட வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார். ஒருவேளை தனது

மரணம் முன்கூட்டியே நிகழ்ந்தால்

லூபோவையும் கருணைக் கொலை செய்து அதன் உடலையும் தன்னோடு சேர்த்து ஒன்றாக அடக்கம் செய்யுமாறு

அவர் விரும்பிக் கேட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. அதன்படி லூபோவைக் கருணைக் கொலை செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று விலங்கு உரிமை பேணும் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. லூபோ தொடர்ந்தும் அவரது இல்லத்தில் வாழ அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்களில் உயிரிழப்பதை அவரது ரசிகர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. மதுரைவீரன் என்ற ஒரு படத்தில் மாத்திரம் அவரது கை, கால்கள் துண்டிக்கப்படுவது போன்ற ஒரு காட்சி இறுதியில் வரும். அதைவிட திரைக்கதைகளில் எம்ஜிஆருக்கு மரணமே இல்லை . தப்பித் தவறி அவர் இறப்பதுபோலக் கட்டப்பட்டால் கூட திரையரங்குகள் தீப்பிடிக்கும். தமிழ்த் திரை உலகம் கடந்துவந்த ஒரு காலகட்டம் அது.

ஆனால் எம்ஜிஆரைப் போலன்றி உயிர்துறக்கும் காட்சிகளில் நடித்துப் பிரபலம் பெற்ற நடிகர் அலைன்.

மக்கள் திலகம், நடிகர் திலகம் போன்றவர்களை ஒத்த ஒரு மகா நடிகனின் இழப்பின் துயரத்தில் பிரெஞ்சு தேசம் மூழ்கியிருக்கிறது.

மக்கள் திலகம் எம்ஜிஆரைப்

போலன்றித் தனது முக்கிய திரைப்படங்களில் இறுதியில் உயிரிழக்கின்ற அல்லது கொல்லப்படுகின்ற விதமான பாத்திரங்களில் தோன்றி நடித்தவர் அலைன். மரணத்தை முடிவாகக் கொண்ட பாத்திரங்களை அவரே விரும்பி ஏற்றார் என்று நண்பர்கள் கூறுகின்றனர். திரையில் அவரது மறைவுக்காகத் தாங்கள் கண்ணீர் சிந்திய அனுபவங்களை அவரது நிஜ மரணத்துக்குப் பின்பு ரசிகர்கள் பலரும் இப்போது நினைவுகூர்கின்றனர்.

பிரெஞ்சு சினிமாவின் பொற் காலம் எனக் குறிப்பிடப்படும் 1960 களின் சுப்பர் ஸ்டார் நடிகர்களில் உயிரோடு எஞ்சியிருந்த கடைசி ஜாம்பவான்

அலைன் டிலோன் ஆவார். அவர் தனது 89 ஆவது வயதில் காலமான செய்தி வாசகர்கள் அறிந்ததே.


1957 இல் இந்தோசீனாவில் இருந்து திரும்பியவுடன் அலைன் தனது முதல் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் Yves Allégret இவ்வாறு அவரைப் பார்த்துக் கூறினாராம்.


".... நான் பார்க்க விரும்புவது உன்னைத் தான்.. எனவே நீ நடிக்காதே...!"


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

ThasNews-Paris - 21-08-2024




0 comments

Comentários


You can support my work

bottom of page