top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

5 கண்டங்களையும் மேடையாய் கொண்டு சுவடுகளைத் தேடிய அரங்காற்றுகை

🟢லொஸ் ஏஞ்சல்ஸ் வரை

🟡நிறைவு விழா நீண்டது..

🔴கொடியோடு விரைந்தார்

🔵ஹொலிவூட் ரொம் குரூஸ்

படங்கள், செய்திகள்

தாஸ்நியூஸ். கொம்


பாரிஸ், ஓகஸ்ட் 12


கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டையும் முழு உலகையும் உணர்வுபூர்வமாக இணைத்து வைத்திருந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன.

அதனைக் குறிக்கின்ற பிரமாண்டமான நிறைவு விழா நேற்றிரவு Stade De France அரங்கில் மிகக் கோலகலாமாக நடந்தது.


விளையாட்டு வீரர்கள் பல வர்ண வித ஆடைகளில் வந்து குவிந்து அரங்கை அலங்கரிக்க ஒலிம்பிக் கொடி ஏற்றலுடன் தொடங்கிய நிறைவு விழா

திட்டமிட்டதுக்கு அதிகமாக மூன்று மணி நேரம் நீடித்தது.

"ஆவணங்கள்" அல்லது "பதிவுகள் " என்ற கருத்துடனான தலைப்பில் சமகால அரங்க ஆற்றுகை சுமார் 40 நிமிட நேரம் நடைபெற்றது.


ஒளிர்கின்ற தங்க ஆடை அணிந்த பயணி ஒருவர் விண்ணில் இருந்து வந்து ஸ்ரேடியத்தின் நடுவே இறங்குகிறார். விண் மீன்கள் இடையே பயணிக்கின்ற வழிப்போக்கனாகச் சித்திரிக்கப்படுகின்ற அந்த நபர்

அழிந்துபோன ஒலிம்பிக் போட்டிகளின்

சிதைவுகளை - எச்சங்களை - அங்கே மீளக் கண்டுபிடிக்கிறார். பண்டைய கிரேக்க ஒலிம்பிக் போட்டிகளுக்குப் 19 ஆம் நூற்றாண்டில் Pierre de Coubertin

என்பவர் புத்துயிரளித்த வரலாற்றை மீட்டுப் பார்க்கின்ற விதமாக இந்தக் காட்சிப்படுத்தல்கள் அமைந்தன.

Stade de France மைதானம் நடுவே

ஐந்து கண்டங்களுடன் உலக வரைபடம் போன்று தோன்றமளிக்கும் விதமாக நிறுவப்பட்டிருந்த மேடையில் -

ஐந்து கண்டங்களையும் குறிக்கின்ற ஐந்து பாரிய ஒலிம்பிக் வளையங்களுடன் தோன்றிய அரங்கக் கலைஞர்கள் அவற்றை நகர்த்திச் சென்று விண்ணில் பறக்கவிடும் வரை அளிக்கை செய்த ஆற்றுகை விழாவின் முத்திரை பதித்த காட்சியாக மிளிர்ந்தது.

அரங்காற்றுகைக்கான இந்தக் கற்பனைக் கதையை எழுதியவர் Damien Gabriac. தங்க ஆடை அணிந்து வந்த விண் மீன் பயணியாகத் தோன்றியவர் பிரான்ஸின் 32 வயதான பிரபல பிரேக் டான்ஸர் மற்றும் சாகசக் கலைஞர் Arthur Cadre.


பிரான்ஸின் வரலாற்று அறிஞர் Pierre de Coubertin என்பவரே நவீன ஒலிம்பிக்கின் தந்தை எனப் புகழப்படுகிறார். அவரே பிரான்ஸின் பாடசாலைகளில் விளையாட்டைப் புகுத்தியவர். சுவிட்சர்லாந்தில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தை நிறுவிய ஸ்தாபகர்களில் ஒருவர். ஒலிம்பிக் போட்டிகளைக் குறிக்கின்ற ஐந்து வளையங்களை அறிமுகப்படுத்தியவர்.

அருகி மறைந்துவிடும் நிலையில் இருந்த ஒலிம்பிக் விளையாட்டை மீளக் கண்டுபிடித்துப் புத்துயிரளித்த அவரது வரலாற்றை நேற்றைய நிறைவு விழா

அரங்காடல் தொட்டுச் சென்றது.

2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவிருப்பது வாசகர்கள் அறிந்ததே. அதற்காக ஒலிம்பிக் கொடியை அமெரிக்காவிடம்

முறைப்படி கையளிக்கின்ற வைபவம் இன்றைய நிறைவு விழாவில் ஒரு முக்கிய பகுதியாக இடம்பெற்றது.


நிறைவு விழா மேடையில் இறக்கப்பட்ட ஒலிம்பிக் கொடியை பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ சர்வதேச ஒலிம்பிக் குழு வின் தலைவர் தோமஸ் பச்சிடம் கையளிக்க - அவர் அதனை லொஸ் ஏஞ்சல்ஸ் நகர முதல்வர் காரன் பாஸிடம் (Karen Bass) ஒப்படைத்தார்.

பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்த படி கொடிக் கையளிப்பின் உச்சக் கட்டம் அப்போது தொடங்கியது. நிறைவு விழா நடைபெற்ற Stade de France அரங்கின் கூரையில் இருந்து பாய்ந்து வந்தார் பிரபல ஹொலிவூட் நடிகர் ரொம் குருஸ். பலத்த ஆரவார கரகோஷங்களுக்கு மத்தியில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர முதல்வரிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை வாங்கிய அவர், அவரது பாணியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அதனை எடுத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறினார்.

அதன் தொடர்ச்சியாக ரொம் குரூஸ்

பாரிஸ் நகரின் முக்கிய தெருக்களில் மோட்டார் சைக்கிளில்

கொடியுடன் வலம் வந்த காட்சியும், பின்னர் விமானம் ஒன்றில் அதனை

அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சேர்ப்பிக்கும் வரையான காட்சிகளும் முன்னரே படமாக்கப்பட்டு நிறைவு விழா

அரங்கில் ஒளிபரப்பப்பட்டன.


பாரிஸில் தொடங்கி லொஸ் ஏஞ்சல்ஸ் வரை நீண்ட நிறைவு விழா மூன்று மணி நேரம் நீடித்தது. சுமார் 70 ஆயிரம் பார்வையாளர்கள் அரங்கை நிறைத்திருந்தனர். அதைவிடப் பல மில்லியன் மக்கள் விழாக் காட்சிகளை திரைகளில் கண்டு களித்தனர்.


இறுதியாக ஒலிம்பிக் தீபத்தை அணைக்கின்ற நிகழ்வுடன் விழா நிறைவுபெற்றது.

நேற்றைய நிறைவு விழாவில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் தங்கள் நாடுகளது தேசியக் கொடிகளுடன் அரங்கத்தில் தோன்றி ஆடிப்பாடி உற்சாகம் பொங்க ஆர்ப்பரித்தனர். அவர்களுடன் உலகப் புகழ் பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் குழுவினரும் இணைந்து பாடியும் ஆடியும் பரவசப்படுத்தினர்.


உலகம் மற்றொரு கோடைகால ஒலிம்பிக்கைக் காண்பதற்கு ஆயிரத்து 433 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

12-08-2024

0 comments

Comments


You can support my work

bottom of page