top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

5ஆம் மாடியிலிருந்து குழந்தைகளை வீசிய தந்தை தானும் பாய்ந்து உயிர்மாய்ப்பு

குடும்பப் பிணக்கினால்

பாரிஸில் அதிர்ச்சிச் சம்பவம்


பாரிஸ், ஜூலை 7


தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை ஐந்தாவது தளத்தில் உள்ள வீட்டில் இருந்து ஜன்னல் வழியே தூக்கி வீசிய பின்பு தானும் வெளியே குதித்து உயிரை மாய்த்திருக்கிறார்.


பாரிஸ் 14 நிர்வாக வட்டகையில் porte de Vanves பகுதியில் நேற்று முன்னிரவு 20.30 மணியளவில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


தந்தையார் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மற்றும் ஐந்து வயதான குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களது நிலை என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. குடியிருப்பு மாடிக் கட்டடத்துக்கு வெளியே தரையில் காணப்பட்ட குழந்தைகளை நேரில் கண்ட அயலவர்கள் முதலில் அவர்கள் அங்கு விளையாடுகின்றனர் என எண்ணினர். பின்னரே அவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீட்டில் இடம்பெற்ற குடும்பப் பிணக்கே

இந்த அவலச் சம்பவத்துக்குக் காரணம்

என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவித்தன. 49 வயதான அந்தத் தந்தை வெளியே குதிப்பதற்கு முன்பாகக் குழந்தைகளின் தாயாரையும் ஜன்னல் வழியாக

வெளியே தள்ள முயற்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதிர்ச்சியால் மயக்கமுற்ற நிலையில் வீட்டின் உள்ளே தரையில் கிடந்த தாயாரைப் பின்னர் அவசர சேவையினர் மீட்டிருக்கின்றனர்.


கை, கால், இடுப்பு முறிந்து உயிருக்கு மிக ஆபத்தான கட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தைகள் இருவரும் பொலீஸ் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவினரின் வழித்துணையுடன் வீதிவழியாக நெக்கர் குழந்தைகள் மருத்துவமனையின் (Necker Hospital) அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு விரையப்பட்டனர்.


சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சியுற்ற அயலவர்களுக்கு ஆற்றுப்படுத்தும் மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்கப்பட்டன.

பாரிஸ் நீதிபதி ஒருவர் நேற்றிரவு

சம்பவம் நடந்த குடியிருப்புப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார்.


பாரிஸிலும் சுற்று வட்டாரங்களிலும் வீட்டு வன்செயல்களில் குழந்தைகள் கொல்லப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் அதிகரித்துவருகின்றன.


படங்கள் :நன்றி பரிஷியன் செய்திச் சேவை.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

07-07-2024

0 comments

Comments


You can support my work

bottom of page