ஒலிம்பிக் ஆரம்ப வேளை
போக்குவரத்து ஸ்தம்பிதம்
எட்டு லட்சம் பேர் அந்தரிப்பு
பாரிஸ், ஜூலை 26
பிரான்ஸின் அதிவேக ரயில் சேவை மார்க்கங்களை இலக்கு வைத்து நேற்று நள்ளிரவுக்குப் பின் இன்று அதிகாலையில் பல இடங்களில் பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
ரயில் தொடர்புக் கேபிள்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் சமிக்ஞை நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. ரயில்கள் வேறு மார்க்கங்களில் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. ஏராளமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.
இன்று மாலை ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழா நடைபெறவுள்ள நிலையில் பாரிஸ் நோக்கிப் பயணித்த லட்சக்கணக்கான ரசிகர்களது பயணங்கள் இதனால் தடைப்பட்டிருக்கின்றன. லண்டன் - பாரிஸ் இடையிலான ஈரோ ஸ்ரார் (Eurostar) ரயில் சேவைகளிலும் தடை, தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
படம் :ரயில் தொடர்பு கேபிள்கள் எரிந்த நிலையில்...
திருத்த வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எனினும் சேவைகள் வழமைக்குத் திரும்ப சில தினங்கள் எடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர். பயணம் தடைப்பட்டவர்களுக்கு ரிக்கற் கட்டணம் நூறு சதவீதம் மீளளிக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரயில் சேவைகளைக் முடக்குவதற்காக நன்கு திட்டமிட்டுப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஒரு சீர்குலைப்புத் தாக்குதல் இது என்று நாட்டின் தேசிய ரயில் போக்குவரத்து நிறுவனமாகிய SNCF தெரிவித்துள்ளது.
மேற்கு அத்திலாந்திக் மற்றும் வடக்கு, கிழக்கு(Atlantique, Nord et Est) ரயில் மார்க்கங்களை இலக்கு வைத்து நள்ளிரவுக்குப் பின்பு பல இடங்களில் நடத்தப்பட்டுள்ள இத் தாக்குதல்களால் ரயில் பயணிகள் ஆங்காங்கே முக்கிய நிலையங்களில் முடங்கி நிற்கின்றனர். பாரிஸில் மிகப் பெரிய ரயில்மார்க்க மையமாகிய Paris-Montparnasse நிலையத்தில் இருந்து சேவைகள் எதுவும் நடைபெறவில்லை. அங்கு பெரும் பயணிகள் நெரிசல் காணப்படுகிறது. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
26-07-2024
Comments