top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஃபொக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் பீற் ஹெக்செத் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர்

அரச செலவைக் குறைக்கும்

முக்கிய பொறுப்பில் மாஸ்க்


பாரிஸ், நவம்பர் 14


அமெரிக்காவின் அதிபராகத் தெரிவாகியிருக்கின்ற டொனால்ட் ட்ரம்ப், நாட்டின் புதிய பாதுகாப்புச் செயலாளராகப் பிரபல ஃபொக்ஸ் நியூஸ் தொகுப்பாளரும் முன்னாள் படை வீரருமாகிய பீற் ஹெக்செத்தை (Pete hegseth) நியமித்திருக்கிறார்.


ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்கப்படையில் பணியாற்றிய 44 வயதான ஹெக்செத், தனது முதலாவது அரசியல்நியமனத்திலேயே உலகின் சக்தி மிக்க வல்லரசுப் படைகளுக்குப் பொறுப்பான அதி முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.


கடினமானவர், புத்திசாலி.,அதேசமயம் "அமெரிக்காவுக்கு முதலிடம்"(America First") என்ற கொள்கையில் உண்மையான நம்பிக்கை கொண்டவர் என்று ஹெக்செத்தைப் புகழ்ந்திருக்கிறார் ட்ரம்ப்.


மினியாபோலீஸில் (Minneapolis) பிறந்த பீற் ஹெக்செத் தனது மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளுடன் ரென்னசியில் (Tennessee) வசித்து வருகிறார்.

சமீப ஆண்டுகளாக ஃபொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் பழமைவாத விடயங்கள் தொடர்பான வர்ணணையாளராகப் பணியாற்றுகின்றார். இராணுவம் மற்றும் படைவீரர்கள் தொடர்பான விடயங்களில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.


கடந்த வாரம் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப் தனது புதிய ஆட்சியைக் கொண்டு நடத்தப்போகின்ற அரசுக் கட்டமைப்பை நிறுவத் தொடங்கியுள்ளார். முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமித்துவருகிறார்.


அமெரிக்காவின் அரசியலில் புதிதாக நுழைந்துள்ள மற்றொருவராகிய பில்லியனர் எலொன் மாஸ்க்கிற்கு அரசுச் செலவுகளைக் குறைக்கின்ற பொறுப்புடன் தொடர்புடைய முக்கிய பதவி வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

இதேவேளை, தெரிவுசெய்யப்பட்ட அதிபர் ட்ரம்ப் இன்று வெள்ளை மாளிகைக்குச் சென்று வெளியேறிச் செல்லுகின்ற அதிபர் ஜோ பைடன் அவர்களைச் சந்தித்தார். ஓவல் அலுவலகத்தில் இரண்டு தலைவர்களும் கைலாகு கொடுத்த காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் பிரதான இடம்பிடித்துள்ளன.

சீரான முறையில் அதிகாரத்தைக் கைமாற்றிக்கொள்வது தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

13-11-2024

0 comments

Comments


You can support my work

bottom of page