இடதுசாரி ஆதரவாளர்கள்
ரிப்பப்ளிக் சதுக்கத்தில்
ஆடிப்படிக் கொண்டாட்டம்
படம் :இடதுசாரி முன்னணியின் வெற்றியைக் கொண்டாட பாரிஸில் ரிப்பப்ளிக் சதுக்கத்தில் நேற்றிரவு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர்.
பாரிஸ், ஜூலை 8
தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் புதிய அரசு தொடர்பாகத் தீர்மானம் எடுப்பதற்கு அரசுத் தலைவர் மக்ரோன் காத்திருக்கிறார் என்று எலிஸே மாளிகையின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
தேர்தலில் மூன்று முக்கிய அணிகளும் அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறிவிட்டன. ஆயினும் ஆகக் கூடிய ஆசனங்களை வென்ற அணிக்கு அரசமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்காக அதிபர் மக்ரோன் பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
அதிபர் நியமிக்கின்ற பிரதமர்- அவர் எந்தக் கட்சியையோ கூட்டணியையோ சேர்ந்தவராக இருப்பினும்- நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இடதுசாரி முன்னணிக்குள் ஒன்றுக் கொன்று முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட பல கட்சிகள் அடங்கியுள்ளன. தேர்தலின் போது அவை பிரதமர் பதவிக்கென்று தமக்குள் பொதுவான வேட்பாளர் எவரையும் முன்னிறுத்தவில்லை. அந்த அணி சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரைப் பிரதமராக இனிமேல் தான்
தெரிவுசெய்கின்ற நிலைமை உள்ளது.
புதிய பிரதமரை நியமிக்க வசதியாகத் தற்போதைய பிரதமர் கப்ரியேல் அட்டால் இன்று திங்கட்கிழமை தனது பதவி விலகும் கடிதத்தை மக்ரோனிடம் கையளிக்கவுள்ளார். அதன் பிறகே புதிய அரசமைக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக அறிவிக்கப்படலாம்.
பிரான்ஸின் மூத்த அரசியல்வாதியும் தீவிர இடதுசாரியுமாகிய ஜோன் லுக் மெலோன்சோன் அவர்களால் உருவாக்கப்பட்ட இடதுசாரிகளது கூட்டமைப்பே இந்தத் தேர்தலில் புதிய வெகுசன முன்னணியாக எழுந்தது. அந்த முன்னணியின் தேர்தல் வெற்றியில் அவருக்கும் கணிசமான பங்கு உள்ளது. ஆனால் தீவிர வலதுசாரியாகிய மரின் லூ பென்னைப் போன்றே தீவிர இடதுசாரியாகிய மெலோன்சோனும்
மக்ரோன் தரப்பினராகிய மையவாதிகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு வருகிறார்.
மெலோன்சோனும் அவரது கட்சியும் அங்கம் வகிக்கின்ற எந்த அணியுடனும் தாங்கள் ஆட்சிக் கூட்டணி வைக்கப் போவதில்லை என்பதை அதிபர் மக்ரோன் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இதனால் -
165 வரையான ஆசனங்களை வென்ற மக்ரோனின் தரப்பு, 68 வரையான உறுப்பினர்களுடன் நான்காவது நிலையில் இருக்கின்ற வலதுசாரி ரிப்பப்ளிக்கன் கட்சி அணியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.
இந்தப் பின்னணியில் மக்ரோன் பிரதமராக யாரை நியமிக்கப் போகிறார்,? அரசமைப்பதற்கான கூட்டில் எந்தெந்தக் கட்சிகள் கைகோர்க்கலாம்? என்பன போன்ற முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. தேர்தல் முடிந்துவிட்டாலும் அரசியலில் கடுமையான சூழ்நிலைகளை நாடு இன்னமும் தாண்டவில்லை என்பதை அவதானிகள் நினைவுபடுத்துகின்றனர். எந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் சட்டங்களை இயற்றவோ மாற்றவோ வக்கற்ற இழுபறி நிலையிலேயே அடுத்த அரசாங்கம் நீடிக்கும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை -
நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி முன்னணியில் போட்டியிட்ட சோசலிஸக் கட்சியைச் சார்ந்த முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட் எம்பியாகத் தெரிவாகியிருக்கிறார்.
⚪பிந்திய செய்திகளுக்கு தாஸ்நியூஸ் செய்திச் சேவையுடன் இணைந்திருங்கள்...
🔵முன்னர் வந்த செய்தி https://www.thasnews.com/post/ம-ல-ந-ல-வரம-59-71-வ-க-கள-ப-ப-ம-தல-ச-ற-ற-வ-டவ-ம-சற-ற-அத-கம
தாஸ்நியூஸ் - பாரிஸ்
08-07-2024
コメント