வானிலை எதிர்வு கூறல்
பாரிஸ், மே 12
ஓரிரு நாள்கள் குறிப்பாக வெள்ளி- சனிக்கிழமைகளில் நீடித்த வெயிலுடன் கூடிய இதமான காலநிலை ஞாயிற்றுக்கிழமை பகலுடன் மாறிவிடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடிமுழக்கம், ஆலங்கட்டிப் பொழிவுடன் கூடிய மழை மீண்டும் திங்கட்கிழமை முதல் தொடங்கும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
பாரிஸ் பிராந்தியத்தில் இன்று ஞாயிறு மதியம் முதல் ஆரம்பிக்கக்கூடிய மின்னலுடன் கூடிய மழை மாலையில் நோர்மன்டி மற்றும் (Normandy) Hauts-de-France பகுதிகளுக்கு விரிவடையும்.
மே 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த இடிமின்னல் மழை வாரத்தின் எல்லா நாட்களிலும் தொடரலாம் என்றும் மெத்தியோ பிரான்ஸ் (Météo-France)
எதிர்வு கூறியுள்ளது.
கடந்த சில தினங்கள் நாட்டின் பல பகுதிகளில் முழு அளவிலான கோடை கால வெப்பம் நிலவியது. அத்துடன் நாட்டில் புதன், வியாழன் இரு தினங்களும் அடுத்தடுத்த பொது விடுமுறை நாட்களாக அமைந்ததால் நகரங்களில் மக்கள் நடமாட்டம் அலைமோதியது.
உல்லாச மையங்களிலும், பொழுதுபோக்கு இடங்களிலும் சனக் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
இதேவேளை, நீண்ட வார இறுதி விடுமுறையைக் கழித்துவிட்டுத் திரும்புவோரது வாகனங்கள் காரணமாக பாரிஸ் நோக்கி வருகின்ற முக்கிய வீதிகளில் நேற்றும் இன்றும் பெரும் நெரிசல் தோன்றியுள்ளது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
12-05-2024
Comments