போரின் ஆயிரமாவது நாளில் அமெரிக்க ஏவுகணை மூலம்
ரஷ்யாவின் ஆயுதக் கிடங்கை
தாக்கியளித்தது உக்ரைன்!!!
பாரிஸ், நவம்பர் 19
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஆயிரம் நாள்கள் நிறைவடைகின்ற இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பதற்றத்தை அதிகரிக்கும் விதமான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அணுவாயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய சாத்தியமான நிலைமைகள் தொடர்பான புதிய ஆணை ஒன்றில் ஒப்பமிட்டுள்ளார். எதிர்காலத்தில் நீண்டதூர பால்ஸ்டிக் ஏவுகணைகள் (ballistic missiles) மூலம் ரஷ்யா மீது நடத்தப்படக் கூடிய தாக்குதலை, அணுவாயுதங்களைப் பயன்படுத்தித் திருப்பித் தாக்குதல் நடத்துவதற்கான பல நிபந்தனைகளில் ஒன்றாகச் சேர்த்துள்ளார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. .
ரஷ்யாவுடனான போரில் அமெரிக்கா அதன் 300 கிலோ மீற்றர்கள் தூரத்துக்கு மேல் சென்று தாக்கக் கூடிய நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியதற்குப் பதிலடியாகவே புடின் இவ்வாறு புதிதாக அணு ஆயுதத் தாக்குதல் மிரட்டலை விடுத்திருப்பதாக நம்பப்படுகிறது.
அதேசமயம், உக்ரைன் படைகள் இன்றைய தினம் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணையைப் பயன்படுத்தி ரஷ்யாவின் எல்லைக்குள் முதலாவது தாக்குதலை நடத்தியுள்ளன
என்று அறிவிக்கப்படுகிறது.
உக்ரைன் எல்லையோரமாக அமைந்துள்ள Bryansk என்ற ரஷ்யப் பிராந்தியத்தில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மொஸ்கோவில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு
குற்றம்சுமத்தியுள்ளது. அமெரிக்கா மோதலை விரிவுபடுத்துகிறது என்று வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாரோவ் (Sergey Lavrov) கண்டனம் வெளியிட்டிருக்கிறார்.
ஏரிஏசிஎம்எஸ் எனப்படுகின்ற இராணுவத் தந்திரோபாய ஏவுகணை அமைப்பு (Army Tactical Missile System - Atacms) மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு இன்னமும் இரண்டு மாத காலம் மாத்திரமே இருக்கின்ற நிலையில் பதவி விலகிச் செல்லவுள்ள ஜோ பைடன், அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனுக்குப் பச்சைக் கொடி காட்டியிருப்பது வாசகர்கள் அறிந்ததே. அது தொடர்பான விரிவான செய்தி கீழே இணைப்பில் உள்ளது.
பைடனின் இந்தத் திடீர் முடிவுக்கு உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியப் படைகள் ரஷ்யாவின் பக்கம் இணைந்து கொண்டமையே காரணம் என்று அமெரிக்கப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் தீர்மானத்தை அதிபர் பைடன், புதிதாகப் பதவியேற்கவுள்ள
டொனால்ட் ட்ரம்புடன் கலந்தாலோசித்த பின்னர்தான் எடுத்தாரா என்பது தெரியவரவில்லை. பதவிக்கு வந்தவுடன் ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் விரும்புகிறார் என்று அவரது ஆலோசகர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் தான் இழந்த எல்லைகளை மீளப் பெறுவதுபற்றிச் சிந்திக்காமல் அமைதியை ஏற்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்று ட்ரம்பின் ஆலோசகர் ஒருவர் கூறியிருந்தார்.
⚫முன்னர் வந்த செய்தி :https://www.thasnews.com/post/ந-ண-ட-த-ர-ஏவ-கண-கள-ல-ரஷ-ய-வ-த-த-க-க-அம-ர-க-க-அன-மத
தாஸ்நியூஸ் - பாரிஸ்
19-11-2024
Comments