வெளிநாட்டுக்கு அவர்
படை அனுப்ப முடியாது!
மரின் லூ பென் சவால்
தேர்தலுக்கு முதலே
பிரதமர் - ஜனாதிபதி
அதிகார முரண்பாடு
பாரிஸ், ஜூன் 27
அடுத்து ஆட்சியமைக்கப்போகின்ற பிரதமருக்கும் ஐனாதிபதிக்கும் இடையேயான அதிகாரப் போட்டி இப்போதே தொடங்கிவிட்டது. போட்டித் தரப்புகளிடையே பரப்புரை மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.
உக்ரைனுக்குத் தரைப்படைகளை அனுப்பவேண்டிய அவசியத்தை மறுக்க முடியாது என்று அதிபர் மக்ரோன் கூறுவருகிறார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஜோர்டான் பார்டெல்லாவின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து அதிகாரத்துக்கு வந்தால் அது சாத்தியமாகுமா?
இதுவிடயத்தில் அதிபருக்குள்ள அதிகாரத்தை மறுக்கும் விதமாக மரின் லூ பென் அம்மையார் வாக்களிப்புக்கு முன்னரே இன்று வெளியிட்ட கருத்து பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
ரெலிக்கிராம் செய்திச் சனலுக்கு இன்று வியாழக்கிழமை அவர் வழங்கிய செவ்வியில், ஜனாதிபதியின் "ஆயுதப்படைகளின் தலைவர்" ("commander in chief") பதவி வெறும் "மரியாதைக்குரிய" ஒன்று மட்டுமே என்று கூறியிருக்கிறார்.
தனது கட்சி அதிகாரத்துக்கு வந்து ஜோர்டான் பார்டெல்லா பிரதமராகப் பதவியேற்றால் அதிபரது அதிகாரங்கள் குறையும் எனத் தான் நம்புகிறார் என்று லூ பென் தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் பார்டெல்லாவுக்கு மக்ரோனுடன் முரண்படும் நோக்கம்
கிடையாது. ஆனால் அவர் சிவப்புக் கோடுகளை கணக்கில் எடுக்க மாட்டார்.
ஜனாதிபதியால் வெளிநாட்டுக்குப் படைகளை அனுப்பமுடியாதிருக்கும்.
-இவ்வாறு உக்ரைனுக்குப் படைகளை அனுப்ப முடியாது என்ற சாரப்பட லூ பென் அம்மையார் மறைமுகமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதேசமயம் அவர் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில்,
பிரதமரே வரவு செலவுத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவார் என்பதால் நாட்டின் படைகளை ஜனாதிபதி வெளிநாட்டுக்கு அனுப்புவது தடுக்கப்படும் - என்று எழுதியிருக்கிறார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு, சர்வதேச நெருக்கடி, இராணுவத் தலையீடுகள் சர்வதேச ஒப்பந்தங்கள், அணு ஆயுதங்கள், போர்கள் போன்றவற்றில் தீர்மானங்களை எடுக்கின்ற அதிகாரம் அதிபர் வசமே உள்ளது. அரசமைப்பின் 15 மற்றும் 21 ஆவது பிரிவுகள் நாட்டின் அதிபரே ஆயுதப்படைகளின் தலைவர் என்று கூறுகின்றன. தேசிய பாதுகாப்புத் தொடர்பான அதி உயர் குழுக் கூட்டம் உட்படப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களை அவரே நடத்த முடியும் என்று அரசமைப்பு அதிகாரம் வழங்குகிறது. ஆயினும் மாற்றுக் கட்சி ஒன்றின் பிரதமர் பதவிக்கு வரும் பட்சத்தில் இந்த விவகாரங்களில் அவருக்குள்ள அதிகாரப் பங்கு என்ன எந்தெந்த விவகாரங்களில் அவர் எவ்வாறு தலையிட முடியும் என்பன போன்ற விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.
அரசமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட - ஐனாதிபதியின் மிக முக்கிய அதிகாரங்களில் ஒன்றாகிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவியை லூ பென் வெறும் "மரியாதைக்குரிய" பதவி என்று விளித்து மலினமாகக் கருத்துக் கூறியிருப்பதற்கு அரச உயர்மட்டத்தில் உடனேயே கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இடைத் தேர்தலில் பார்டெல்லா அணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நாட்டின் அதிபரும் பிரதமரும் வேறு வேறு கட்சிகளைச்சார்ந்தவர்களாக - எதிரும் புதிருமான அரசியல் கொள்கைகொண்டவர்களாக - அமையப்போகின்றனர் . பிரான்ஸில் இவ்வாறு ஒர் ஆட்சி அதிகார நிலைவரம் ஏற்படுவது 2002 ஆம் ஆண்டின் பின்னர் இதுவே முதல் முறையாக இருக்கும்.
அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் மாத்திரமே பிரதமர் பதவியை ஏற்பேன் என்று தெரிவித்துள்ள ஜோர்டான் பார்டெல்லா, தொலைக்காட்சிப் பேட்டி
ஒன்றின்போது -
உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவையும் உதவிகளையும் வழங்குவோம். ஆனால் நீண்ட தூர ஏவுகணைகளையோ தரைப் படைகளையோ அங்கு அனுப்ப மாட்டோம் - என்று கூறியிருந்தார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
27-06-2024
Comments