top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

அமெரிக்காவின் "ரவர்-22" படைத்தளம் மீது ட்ரோன் தாக்குதல்! வீரர்கள் மூவர் பலி!! 30 பேருக்குக் காயம்!!

🔴மத்திய கிழக்கில்

பதற்றம் அதிகரிப்பு

படம் :ரவர் 22 படைத் தளத்தின் செய்மதிப் படம். - - - - -


பாரிஸ், ஜனவரி, 29.


மத்திய கிழக்கில் ஜோர்தான் நாட்டில் அமெரிக்கப் படைத் தளம் ஒன்றின் மீது நடு இரவில் நடத்தப்பட்ட பெரும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது மூன்று வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முப்பது பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.


ஜோர்தானின் வட கிழக்கே - சிரியா நாட்டின் எல்லையோரம் - உலகின் கண்களில் இருந்து மூடி மறைக்கப்பட்ட ரகசியப் பிரதேசத்தில் அமைந்திருந்த "ரவர் 22" (Tower 22) என அழைக்கப்படுகின்ற படைத் தளமே சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. படைத் தளத்தில் அமைந்துள்ள வீரர்களது விடுதிக் கட்டடம் ஒன்றே தாக்குதலுக்கு இலக்கானதாகச் சொல்லப்படுகிறது.


இந்தத் தாக்குதலை அமெரிக்கப் படைகளது மத்திய கிழக்குக் கட்டளைப் பீடம் உறுதிப்படுத்தியதை அடுத்து, அதிபர் ஜோ பைடன், படை வீரர்களது இழப்பு அமெரிக்கர்களது மனங்களுக்குப் பாரமான செய்தியாக வந்துள்ளது என்று அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். தாக்குதலுக்கு

சிரியாவைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற, ஈரான் ஆதரவு பெற்ற இஸ்லாமியத் தீவிரவாதக் குழு ஒன்றின் மீது அவர் பழி சுமத்தியிருக்கிறார். தக்க பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரித்திருக்கின்றார். ஈரானின் செய்தி நிறுவனமாகிய இர்னா (IRNA)

விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தெஹ்ரான் மறுத்திருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பித்த பின்னர் மத்திய கிழக்கில் அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்படுகின்ற முதல் தாக்குதல் சம்பவம் இது என்பதை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் பாலஸ்தீனியர்களை ஆதரிக்கின்ற ஹூதி தீவிரவாத ஆயுதக் குழுவினர் செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கப் படையினரை இலக்கு வைத்து அடிக்கடி

ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அமெரிக்காவும் இங்கிலாந்தும் யேமன் நாட்டில் உள்ள ஹூதிகளது நிலைகள் மீது கூட்டாக வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னரும் செங்கடல் தாக்குதல்கள் தொடர்கின்றன. நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளது சரக்குக் கப்பல்கள் செங்கடல் பகுதியைத் தவிர்த்துப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.


காஸா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போருக்குப் பின்னர் , பிராந்தியம் முழுவதும் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்கள் அமெரிக்கப்படையினரை நேரடியாக இலக்குவைக்க ஆரம்பித்திருக்கின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

29-01-2024

0 comments

Comments


You can support my work

bottom of page