top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

அயா நகமுரா உட்பட உலகப்புகழ் பாடகிகள் பாரிஸ் மேடையில்!

3 மணிநேரம் நீடிக்கும்

ஒலிம்பிக் ஆரம்ப விழா

நிகழ்ச்சி நிரல்"ரகசியம்"


பாரிஸ், ஜூலை, 25


பிரெஞ்சு மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதியில் (francophone) இருந்து அறிமுகமாகி சர்வதேச அளவில் ரசிக்கப்படுகின்ற பிரான்ஸின் பிரபல பாடகி அயா நகமுரா (Aya Nakamura) ஒலிம்பிக் தொடக்க விழா மேடையில் தோன்றிப் பாடவுள்ளார். மாலி நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 29 வயதான நகமுரா பிரான்ஸின் தீவிர வலதுசாரிகளது கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே

பாரிஸ் ஒலிம்பிக் நிகழ்வில் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடக்க விழா ஏற்பாடுகள் கடந்த ஆண்டில் ஆரம்பமாகியபோதே பாடகி நகுமராவுக்கு அதில் முக்கிய இடம் அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அப்போது முதல் அதுதொடர்பான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியிருந்தன.


இதேவேளை -


கனடா கியூபெக்கைச் சேர்ந்த பிரபல பாடகி செலின் டியோன்(Céline Dion)

பாரிஸில் தங்கியுள்ளார். கடந்த திங்களன்று தனது தனிப்பட்ட ஜெற் விமானத்தில் பாரிஸ் வருகைதந்த அவர் நகரின் மையப் பகுதியில் உள்ள ஓர் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனையடுத்து அவரது வருகை எதற்காக என்பதை அறிவதற்காகச் செய்தி ஊடகங்கள் குடையத் தொடங்கின.

படம் :பாடகி செலின் டியோன்


வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடக்க விழா மேடையில் அவர் தோன்றுவாரா? தொலைக்காட்சி நேர்காணலின் போது இதுபற்றிய கேள்விக்கு அதிபர் மக்ரோன் வழங்கிய "புன்னகை" அதனை உறுதிப்படுத்தியுள்ளது. "இது ஒரு மிக முக்கியமான செய்தி. ஏனெனில் அவர் ஒரு முக்கியமான கலைஞர்" - என்று கூறியிருந்தார் மக்ரோன்.


பாடகி செலின் டியோன் முதல் பெண் பிரிஜித் மக்ரோனுடன் எடுத்துக் கொண்ட படங்களைத் தனது சமூக வலை ஊடகத்தில் பகிர்ந்திருக்கிறார்.

பிரெஞ்சு - ஆங்கில மொழிகளில் பாடுகின்ற அவர் தொடக்க விழாவில் கலந்துகொள்வதுடன் நின்றுவிடுவாரா அல்லது பாடலும் பாடுவாரா என்ற பெரும் கேள்வி அவரது ரசிகர்களின் பொறுமையைச் சோதித்து வருகிறது.

ஒலிம்பிக் தொடக்க விழா மேடையில் யார் எவரெல்லாம் தோன்றுவர், எந்தக் கலைஞர்கள் பாடுவர், ஆடுவர் என்பன போன்ற விவரங்கள் எதுவுமே பகிரங்கப்படுத்தப்படவில்லை. லேடி ஹாஹா (Lady Gaga) டுவா லீபா (Dua Lipa) போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற கலைஞர்கள் பலரும் கூட பிரபல நடனக் குழுக்களுடன் ஒலிம்பிக் மேடைகளில் தோன்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் அந்தத் தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை..


இரவு 19.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள தொடக்க விழா மூன்று மணி நேரங்கள் நீடிக்கும். நாடுகள் ஒவ்வொன்றினதும் ஒலிம்பிக் அணிகள் அவற்றோடு பாரிஸ், மற்றும் பிரான்ஸின் கலை பண்பாட்டு அம்சங்களைப் பிரதிபலிக்கின்ற குழுக்கள் செய்ன் நதி மீது மிதவைப் படகுகளில் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் செல்கின்ற கண்கொள்ளாக் காட்சிகளைக் காண்பதற்காக முழு உலகமும் காத்திருக்கிறது. நதியின் ஓரங்களிலும் நதியின் இருபுற வீதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்தக் காட்சிகளை நேரிலும் கண்டுகளிக்கவுள்ளனர்.


பாரிஸ் நகரின் மையத்தில் செய்ன் நதியில் ஒஸ்ரலிஸ் பாலத்தடியில் (Austerlitz bridge) இருந்து தொடங்கவுள்ள அணிவகுப்பு அங்கிருந்து நதிவழியே சென்று Trocadéro பகுதியில் ஈபிள் கோபுரத்தை அண்டி நிறைவடையும். தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக அதிபர் மக்ரோன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்துப் போட்டிகளை உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைப்பார்.தொடக்கவிழாக் காட்சிகள் உலகெங்கும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகும். ரசிகர்களின் வசதி கருதி பாரிஸிலும் நாட்டின் முக்கிய நகரங்களிலும் பல்வேறு பொது இடங்களில் அகலத் திரைகள் நிறுவப்பட்டுள்ளன.


தொடக்க விழா முடிவடையும் வரை பாரிஸ் வான் பரப்பு மூடப்பட்டிருக்கும். விமானப் பறப்புகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டிருக்கும்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

25-07-2024




0 comments

Comments


You can support my work

bottom of page