top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

அல்ஜீரியப் புரட்சித் தலைவர் லார்பியை பிரெஞ்சுப் படையே கொன்றது! மக்ரோன் ஒப்புக்கொண்டார்!


இராணுவத்தின் பிடியில்

"தற்கொலை" புரிந்தார் என்ற

வரலாறு திருத்தப்படுகிறது


பாரிஸ்,நவம்பர் 1


அல்ஜீரியப் போருக்குக் காரணமான பெரும் மக்கள் கிளர்ச்சியைத் தொடக்கிவைத்த தேசிய வீரர்களில் ஒருவராகிய லார்பி பென் மெஹிடி (Larbi Ben M'hidi) கைது செய்யப்பட்ட பின்னர் பிரெஞ்சுப் படைகளால் படுகொலைசெய்யப்பட்டார் என்பதை சுமார் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் எமானுவல் மக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார்.


அல்ஜீரியப் போருக்குக் காரணமான நவம்பர் 1, 1954 மக்கள் புரட்சியின் எழுபதாவது ஆண்டு நினைவு நாளாகிய இன்று எலிஸே மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


நூறாண்டுகளுக்கு மேலாகப் பிரான்ஸின் கொலணியாகவிருந்த அல்ஜீரியாவில் 1954-1962 வரை நீடித்த சுதந்திரப் போரின் போது நிகழ்ந்த கொடுமைகள் ஏற்படுத்திய தாக்கம் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் ஆறாத வடுவாக நீடித்து வருகின்றது . போருக்குக் காரணமான கிளர்ச்சியைத் தொடக்கிய முக்கிய தலைவர்களில் ஒருவராகிய லார்பி பென் எம்ஹிடி பிரெஞ்சுப் படைகளால் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களது கைகளில் உயிரிழந்திருந்தார். படையினரின் பிடியில் இருந்த சமயம் தற்கொலை புரிய முயற்சித்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்தார் என்றே

அச்சமயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் அவர் ஜெனரல் போல் உஸ்ஸாரெஸ் (General Paul Aussaresses) தலைமையிலான பிரெஞ்சுப் படைப்பிரிவின் சிப்பாய்களாலே படுகொலைசெய்யப்பட்டார் என்ற தகவலை மக்ரோன் விடுத்த அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது.


லார்பி கைது செய்யப்பட்ட பின்னர் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்

என்பதை அல்ஜீரியாவில் பிரெஞ்சுப் படைகளுக்குத் தலைமை வகித்த ஜெனரல் போல் உஸ்ஸாரெஸ், ஏற்கனவே கடந்த 2001ஆம் ஆண்டு வெளியிட்ட நினைவு நூல் ஒன்றில் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆவணப்படம் :சித்திரவதை செய்து கொல்லப்படுவதற்கு முன்பாக லார்பி பென் மெஹிடி..


பிரெஞ்சு அதிகாரத்துக்கு எதிராகப் போராடிய அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணியை (National Liberation Front - FLN) நிறுவிய ஆறு பேரில்

ஒருவராகிய லார்பி பென் மெஹிடி, பெப்ரவரி 23, 1957 இல் பிரெஞ்சுப் படைகளிடம் பிடிபட்டிருந்தார்.


இதேபோன்று அல்ஜீரிய விடுதலைப்போரின் போது தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட மற்றொரு புரட்சிப்படைப் போராளி அலி பூமென்ட்ஜல் (Ali Boumendjel) என்பவரையும் பிரெஞ்சு இராணுவமே சித்திரவதை செய்து கொன்றது என்பதை அதிபர் எமானுவல் மக்ரோன் 2021 இல் ஒப்புக்கொண்டிருந்தார்.


சமீப காலமாக அதிபர் மக்ரோன் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படுத்திய முரண்பாடுகளைக் களைவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.


⚫தொடர்புடைய பேஸ்புக் பதிவுகளது இணைப்புகள் கிழே :




 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

01-11-2024








0 comments

Comments


You can support my work

bottom of page