top of page
Post: Blog2_Post

அலெப்போ நகரை மின்னல் தாக்குதலில் கைப்பற்றி மேலும் முன்னேறுகின்றது எதிர்ப்புப் படை!

அஸாத்துக்குப் பின்னடைவு

சிரியப் படைக்கு ஆதரவாக

ரஷ்யா விமானத் தாக்குதல்


பாரிஸ், டிசெம்பர் 2


சிரியாவில் தணிந்திருந்த உள்நாட்டுப் போரில் ஒரு திடீர்த் திருப்பமாக

அஸாத் எதிர்ப்புப் படைகள் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவைக் கைப்பற்றியுள்ளன.

அரசுப் படைகள் அந்த நகரத்தைக் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளன.


எதிர்பாராத விதமாக மின்னல் வேகத் தாக்குதல் ஒன்றின் மூலம் நகரத்தையும் அதன் விமான நிலையத்தையும் கைப்பற்றிய தீவிரவாதிகள், அங்கிருந்து மேலும் முன்னேறத் தொடங்கியுள்ளனர் எனச் செய்திகள் வருகின்றன. அவர்களது முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகப் போரிடும் சிரியாவின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யப் படையினர் அங்கு கடும் வான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.


இதுவரையான தாக்குதல்களில் முந்நூறுக்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று லண்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய அமைப்பு தெரிவித்துள்ளது.

வரைபடம் :நன்றி பிபிசி


ஜனநாயக ஆதரவு எழுச்சியை அதிபர் அஸாத்தின் அரசு மிருகத்தனமாக ஒடுக்கியதை அடுத்து 2011 இல் அங்கு

உள்நாட்டுப் போர் தொடங்கியது யாவரும் அறிந்ததே. சுமார் அரை மில்லியன் மக்களைக் கொன்று குவித்த உள்நாட்டுப் போர் 2020 இல் எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டுடன் ஓரளவு தணிந்து ஓய்ந்திருந்தது. எனினும் எதிர்ப்புப் படைகள் வடமேற்கு நகரமான இட்லிப்பையும், அதைச் சுற்றியுள்ள மாகாணத்தின் பெரும் பகுதியையும் தங்கள் கட்டுப்பட்டில் வைவைத்திருந்தன. இட்லிப் நகரில் இருந்து 55 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள அலெப்போ நகரம் கடந்த 2016 இல் அரச படைகளிடம் வீழும் வரை கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக இருந்தது.

சிரியாவில் அதிபர் பஷீர் அஸாத்தின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சண்டையிடும் குழுக்களில் மிகப் பலம் வாய்ந்ததும் மோசமானதும் எனக் கூறப்படுகின்ற எச்ரிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹயத் தஹிரீர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham) தற்போதைய தாக்குதல்களுக்குத் தலைமை வகிக்கிறது.


சிரிய அதிபர் பஷார் அல்-அஸாத் (Bashar al-Assad) அதிகாரத்தில் தொடர்ந்து நீடிப்பதை அமெரிககாவும் அஅதன் மேற்குக் கூட்டணி நாடுகளும் எதிர்த்துவர, ஈரானும் ரஷ்யாவும் நீண்டகாலமாக அவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றன. அஸாத்தின் இராணுவத்துக்கு ஆதரவாக ரஷ்யப் படைகள் அங்கு வான் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.


காஸா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் ஆரம்பித்த போரினால் பெரும் பதற்ற நிலையில் உள்ள மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் புதிதாகச்

சிரியாவில் இப்போது திடீரென வெடித்துள்ள மோதல்கள் மேலும் நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

02-12-2024


0 comments

Comentarios


You can support my work

bottom of page