ஐரோப்பிய கைது உத்தரவு பெல்ஜியத்தில் கார் மீட்பு!!
படம் :குழந்தையுடன் தப்பிச் சென்ற பெற்றோர்களது தோற்றங்களை நீதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
பாரிஸ், ஒக்ரோபர் 25
பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் கண்காணிப்பின் கீழ் இருந்த 17 நாள்களேயான சிசு அங்கிருந்து காணாமற்போயுள்ளது. பாரிஸ் புறநகராகிய உல்னே-சூ-புவா(Aulnay-sous-Bois) பகுதியில் உள்ள l’hôpital Robert-Ballanger ஆஸ்பத்திரியில் இருந்தே குழந்தை கடந்த திங்கள் இரவு கடத்தப்பட்டுள்ளது.
குறைப்பிரசவமாகிய நிலையில் - கட்டாய மருத்துவப் பராமரிப்பின் கீழ் இருக்க வேண்டிய - அந்தச் சிசுவை அதன் பெற்றோர்களே அனுமதி இன்றிக் கடத்திச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்துக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் அவசர
அறிவித்தல் ஐரோப்பிய நாடுகள் எங்கும் விடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் படி உரிமையுள்ள பெற்றோராக இருந்தாலும் குழந்தையை மருத்துவர்களது அனுமதி இன்றி வெளியே கொண்டுசென்றமை
கடத்தலாகவே கருதப்பட்டு அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெற்றோருக்கு எதிராக ஐரோப்பியக் கைது ஆணை விடுக்கப்பட்டுள்ளது.
உயிராபத்தைச் சந்திக்கக் கூடிய நிலையில் உள்ள சந்தியாகோ (Santiago) என்ற அந்தச் சிசுவை உடனடியாக மருத்துவர்களது பொறுப்பில் மீள ஒப்படைக்குமாறு பாரிஸ் அரச வழக்கறிஞர் ஒருவர் பெற்றோருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
பெற்றோர்களே குழந்தையைப் பாதுகாக்கின்ற கடப்பாடுடையவர்கள். அதேசமயம் தனக்குரிய மருத்துவக் கண்காணிப்பைப் பெறுகின்ற உரிமை சிசுவுக்கு உள்ளது என்பதையும்
அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் - குழந்தையை ஆஸ்பத்திரியை விட்டு வெளியே கொண்டுசென்ற பெற்றோர் கார் ஒன்றில் பெல்ஜியம் நாட்டு எல்லைக்குள் தப்பிச் சென்றிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனையடுத்துக்குழந்தையைத் தேடும் பணியில் இணைந்து கொண்ட பெல்ஜியம் பொலீஸார் பெற்றோர்கள் பயணித்த காரைக் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடித்திருக்கின்றனர்.
எனினும் குழந்தையும் பெற்றோரும் எங்கே என்பது இன்னமும் தெரிய வரவில்லை.
25 மற்றும் 24 வயதுடைய அந்த இளம்
பெற்றோர்கள் குழந்தையுடன் எதற்காக நாட்டை விட்டு வெளியே தப்பிச் சென்றனர் என்பது தெரியவில்லை. அவர்கள் எந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற விவரங்களும் இன்னமும் அறியப்படவில்லை. அவர்களது படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரெஞ்சுப் பிரஜைகளாகிய இருவரும்
பாரிஸின் மற்றொரு புறநகராகிய Noisy-le-Sec பகுதியில் வசிக்கின்றனர். அங்கு சோதனைகளை நடத்திய பொலீஸார்
ஐந்து பேரை விசாரணை செய்துள்ளனர்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
25-10-2024
Comments