top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

இங்கிலாந்திலிருந்து கடல்கடந்து வருகிறது பரா ஒலிம்பிக் தீபம்

ஆங்கிலக் கால்வாய் ஊடே

"எக்ஸ்பிரஸ்" அஞ்சலோட்டம்

வரவேற்கப் பாரிஸ் தயார்


பாரிஸ், ஓகஸ்ட் 24


கோடைகால ஒலிம்பிக் விழாவின் தொடர்ச்சியாக வலுக்குறைந்தவர்களுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற 28 ஆம் திகதி புதன்கிழமை பாரிஸில் தொடங்கவுள்ளன.


பரா ஒலிம்பிக் தீபம் லண்டனுக்கு அருகே இன்று சனிக்கிழமை ஏற்றிவைக்கப்பட்டது. பின்னர் அது அங்கிருந்து தீப்பந்தமாகப் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டது.ஆங்கிலக் கால்வாயைக் கடக்கின்ற சுரங்கப் பாதை வழியாக (Channel Tunnel) "எக்ஸ்பிரஸ்" அஞ்சலோட்டத்தில் அது பிரான்ஸ் மண்ணை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.


வடமேற்கு லண்டனில் உள்ள ஸ்ரோக் மண்டெவில் (Stoke Mandeville) என்ற இடத்தில் பிரிட்டிஷ் பரா ஒலிம்பிக் சம்பியன்களாகிய Helene Raynsford மற்றும் Gregor Ewa ஆகியோர் சுமார் இருநூறு பேர் முன்னிலையில் தீபத்தை ஏற்றினர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தலைவர் ரொனி எஸ்தான்கேயும் அந்த வைபவத்தில் கலந்துகொண்டார்.


இங்கிலாந்து விளையாட்டு வீரர்கள் 24 பேர் 50 கிலோ மீற்றர்கள் நீளமான கடலடிச் சுரங்கப் பாதை வழியே தீப்பந்தத்தை அஞ்சலோட்டமாகச் சுமந்து வருவர். தொடர்ந்து பிரான்ஸின் கரையோர நகரமாகிய கலேயில் (Calais)வைத்து பிரான்ஸ் வீரர்கள் 24 பேர் அதனைப் பொறுப்பேற்று எடுத்துவரவுள்ளனர்.


ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறும் பரா ஒலிம்பிக்கின் வரலாறும் ஒன்றல்ல.

பரா ஒலிம்பிக் தீபம் கிரேக்க நாட்டின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்படுவதில்லை. அதன் பிறப்பிடம் இங்கிலாந்து ஆகும். பரா ஒலிம்பிக்கின் வரலாறு 1948 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. ஜேர்மனியைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணரான லுட்விக் குட்மன்

(Ludwig Guttmann) என்பவர் இரண்டாம் உலகப் போரில் காயமடைந்து சக்கர நாற்காலிகளில் முடங்கிய படை வீரர்களுக்காக இங்கிலாந்தில் வட மேற்கு லண்டனில் உள்ள ஸ்ரோக் மண்டெவில் என்ற மருத்துவமனையில்

(Stoke Mandeville Hospital) விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தார். அதிலிருந்துதான் உலக பரா ஒலிம்பிக் போட்டிகள் வளர்ச்சி பெற்றன. அந்த இடமே அதன் தொடக்க இடமாகியது. பரா ஒலிம்பிக் தீபமும் அங்கேயே ஏற்றப்பட்டுப் போட்டி நடைபெறுகின்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவருகிறது.


பிரதான தீப்பந்தம் உட்பட 12 பந்தங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு தினங்களுக்குப் பிரான்ஸின் பல பகுதிகளிலும் ஒளிவீசியவாறு

கடந்து இறுதியில் பாரிஸ் நகரில் உள்ள ரியூலியே பூங்காவின் (Tuileries Gardens) மையத்தில் நிறுவப்பட்டுள்ள

வாயு பலூனுடன் கூடிய ஒலிம்பிக் தீச்சட்டியின் அமைவிடத்தை வந்தடையும். அங்கு தீபத்தை பரா ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு நாளாகிய செப்ரெம்பர் 8 ஆம் திகதி வரை பொதுமக்கள் பார்வையிட முடியும்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

24-08-2024


0 comments

Comments


You can support my work

bottom of page