top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

இடதுசாரிகளது தேர்தல் முன்னணி உதயம்! அடிப்படைச் சம்பளத்தை 1,600€ ஆக உயர்த்த வாக்குறுதி

ஓய்வூதியச் சீர்திருத்தம்

உடனடியாகவே வாபஸ்!


மக்ரோனுக்கு நேர் எதிர்

கொள்கைகள் அறிவிப்பு

பாரிஸ், ஜூன் 15


வலதுசாரிக் கட்சி உள் மோதல்களால் பிளவுபட்டுநிற்கின்ற நிலையில்

பிரான்ஸின் இடதுசாரிகளும் பசுமைக் கட்சிகளும் இணைந்து புதிய தேர்தல் கூட்டு ஒன்றை அறிவித்திருக்கின்றனர். அதற்கு

New Popular Front (Le Nouveau Front populaire) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.


வாக்களிப்புக்கு இன்னமும் மூன்றே வாரங்கள் மாத்திரம் இருக்கையில்

பிரான்ஸின் சோசலிஸக் கட்சி(Parti socialiste) கம்யூனிஸ்ட் கட்சி(Parti communiste) தீவிர இடதுசாரியாகிய ஜீன் லுக் மெலென்சோன் தலைமையிலான La France Insoumise கட்சி மற்றும் பசுமைக் கட்சி(EELV) ஆகியன இணைந்தே இந்தப் புதிய முன்னணியை அறிவித்திருக்கின்றன. அதன் பிரதமர் வேட்பாளராக மூத்த தீவிர இடதுசாரி மெலன்சோனைத் தவிர்த்து விட்டு முன்னணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சித் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒருவரைத் தெரிவுசெய்கின்ற முழுமுயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.


புதிய முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தால் அடுத்த 15 நாட்களில் அவசரமாக முன்னெடுக்கவுள்ள சமூக நலத் திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டிருக்கின்றது.


அதன்படி -


கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்ரோனின் அரசால் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்டம் மீளப் பெறப்படும். தற்சமயம் ஆயிரத்து 400 ஈரோக்களாக உள்ள அடிப்படைச் சம்பளம் ஆயிரத்து 600 ஈரோக்களாக உயர்த்தப்படும். வேலை இழந்தோருக்கான (சோமாஸ்) சலுகைகள் மற்றும்

வீட்டு வாடகை உதவிக் கொடுப்பனவு போன்றனவும் அதிகரிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.


ஆட்சிக்கு வந்து அடுத்த நூறு நாட்களில் முன்னெடுக்கவுள்ள மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் நாட்டின் ஆள்புல இறைமையைத் தொடர்ந்து ஆதரிப்பதும் , உக்ரைனுக்கான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதும்

முன்னணியின் கொள்கைகளில் இடம்பெற்றுள்ளன.


கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தலைமை வேட்பாளர் ரஃபேல் க்ளக்ஸ்மான் (Raphaël Glucksmann)தலைமையில் போட்டியிட்ட

இடதுசாரிகள் அணி, தீவீர வலதுசாரிகள் மற்றும் மக்ரோனின் அணிகளுக்கு அடுத்த படியாக 13.9 வீத வாக்குகளுடன் மூன்றாவது அணியாக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

15-06-2024


0 comments

Σχόλια


You can support my work

bottom of page