போக்குவரத்து சேவைகள்
திங்கள் வேலைநிறுத்தம்?
மக்ரோனின் கடிதச் சர்ச்சை
பாரிஸ், ஜூலை 12
நடைமுறைகளின்படி தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டப்பட வேண்டும். அச்சமயம் சபையில் அதிக இடங்களை வென்ற இடதுசாரி முன்னணியின்
பிரதமரை ஆட்சி அமைக்குமாறு அதிபர் மக்ரோன் அழைப்பு விடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் தேர்தலில் வென்ற தரப்பு ஆட்சி அமைப்பதை அரசுத் தலைவர் தடுக்கின்ற பட்சத்தில் அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் போக்குவரத்துகளை முடக்குகின்ற பெரும் தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
பிரான்ஸின் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் (La Confédération générale du travail-CGT) மிகப்பெரிய தொழிற்சங்கப் பிரிவாகிய ரயில்வே தொழிலாளர்கள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்ற சமயத்தில் வேலைநிறுத்தங்களை முன்னெடுக்க அது முஸ்தீபு செய்து வருகிறது.
நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலில் மூன்று முக்கிய போட்டித் தர்ப்புகளில் எந்தத் தரப்பும் ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாதது தெரிந்ததே. ஆயினும் NFP என்கின்ற பல கட்சிகளை உள்ளடக்கிய இடதுசாரி மக்கள் கூட்டணி (Nouveau Front populaire) நாடாளுமன்றத்தில் ஆகக் கூடிய ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் உரிமை பெற்ற அதிகாரத் தரப்பாக உள்ளது. தீவிர இடதுசாரிக் கட்சியையும் உள்ளடக்கிய அந்தக் கூட்டணிக்குள் அடிப்படைக் கொள்கைகளில் குத்துவெட்டுக்கள் காணப்படினும் ஐனநாயகத் தேர்தல் விதிமுறைகளின்படி ஆட்சி அமைப்பதற்கான சந்தர்ப்பம் அந்தக் கூட்டணிக்கே முதலில் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அந்த அணி இன்னமும் தனது பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கவில்லை. அதற்கிடையில் -
🔵மக்ரோனின் கடிதச் சர்ச்சை
அதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று நேற்றைய தினம் செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தல் நடந்து முடிந்த பின்னர் சில நாள் மௌனத்துக்குப் பிறகு அரசுத் தலைவரின் அந்த மடலில் வெளிவந்துள்ள கருத்துக்கள் அரசியல் மட்டங்களில் கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
அந்தக் கடிதத்தில், தேர்தலில் "யாருமே வெற்றிபெறவில்லை" என்று கூறியிருக்கின்ற மக்ரோன், பிரெஞ்சுக் குடியரசின் பெறுமானங்களையும் ஆட்சி நிறுவக கட்டமைப்புகளையும்
மதிக்கக் கூடிய அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்குப் பெரும்பான்மையுடன் கூடிய பலமான "குடியரசுக் கூட்டணி" ஒன்றை உருவாக்குமாறு அவர் நாட்டின் பாரம்பரியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸின் பிரதான பாரம்பரிய கட்சிகளில் ஒன்றாகிய சோசலிஸக் கட்சி உட்படப் பசுமைக் கட்சிகளும் உள்ளடங்கிய இடதுசாரி மக்கள் முன்னணி ஆட்சி அமைக்கத் தயாராகி வருகின்ற நேரத்தில் அதிபர் மக்ரோன் நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்ற அந்தத் தரப்புக் குறித்து எதுவும் கூறாமல் தேர்தலில் யாருமே வெற்றிபெறவில்லை என்று
மேம்போக்காக - யதார்த்தத்துக்குப் புறம்பாகத் - தனது கடிதத்தில் கருத்துத் தெரிவித்திருப்பதைத் தலைவர்கள் பலரும் கண்டித்திருக்கின்றனர்.
அரசுத் தலைவர் மக்ரோன் இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட்டுப்-புறமொதுக்கி விட்டு -
ஜனநாயக வழிமுறைக்குப் புறம்பான நகர்வை எடுக்கிறார் என்று இடதுசாரித் தலைவர்கள் எண்ணுகின்றனர்.
அதேசமயம் மக்ரோன் நாட்டின் அரசியல் ஸ்திரநிலை கருதிப் பிரதமர் பதவிப் பொறுப்பில் சிறிதுகாலம் நீடிக்குமாறு கப்ரியேல் அட்டாலுக்குப் பணிப்புரை விடுத்திருக்கிறார். அடுத்த ஆட்சிக்குச் சிறிது பொறுத்திருப்போம் என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் -
திங்களன்று நாடாளுமன்றம் கூடும் போது என்ன நடக்கும் என்ற தீவிர எதிர்பார்ப்ப நாடு முழுவதும் எழுந்துள்ளது.
🔵தொடர்புடைய செய்தி இணைப்புகள்
தாஸ்நியூஸ் - பாரிஸ்
11-07-2024
-
Comments