மாற்று வழி ஒன்றுக்கான
பேச்சுக்களுக்கு அழைப்பு
நாட்டின் அரசியல் நிலை
மீண்டும் சூடு பிடிக்கிறது
பாரிஸ், ஓகஸ்ட் 27
பிரான்ஸின் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியாகிய
பொது மக்கள் முன்னணியை (Nouveau Front Populaire) அரசமைப்பதற்கு அழைக்கப்போவதில்லை என்று அரசுத் தலைவர் மக்ரோன் நேற்று அறிவித்திருக்கிறார். நாட்டின் அரசுக் கட்டமைப்புகளின் ஸ்திரத்தன்மைக்கு அது அச்சுறுத்தலானது என்று அவர் அதற்குக் காரணம் கூறியிருக்கிறார்.
அத்துடன் அவர்களது அரசு அமையும் பட்சத்தில் அது உடனடியாகவே எதிர்ச் சக்திகளால் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் கவிழ்க்கப்படக்கூடிய ஏது நிலை தெளிவாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கடந்த மாதம் மக்ரோன் திடீரென அறிவித்த இடைக்காலப் பொதுத் தேர்தலில் நாட்டின் சோசலிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரிகளையும் பசுமைக் கட்சியையும் உள்ளடக்கிய கூட்டணியான பொது மக்கள் முன்னணி(Nouveau Front Populaire) அதிக இடங்களை வென்றிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. ஆட்சி அமைப்பதற்கான நாடாளுமன்ற அறுதிப்பெரும்பான்மையைக் கிட்ட நெருங்கவில்லையாயினும் ஆகக் கூடிய ஆசனங்களை வென்ற அணி என்ற ரீதியில் அரசை அமைப்பதற்குத் தங்களுக்கே முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று அதன் தலைவர்கள் கோரியிருந்தனர். நீண்ட இழு பறிகளுக்குப் பிறகு சிவில் சேவை அதிகாரியாக விளங்கிய பெண் ஒருவரைத் தங்களது சார்பில் பிரதமர் வேட்பாளராகவும் தெரிவுசெய்து நிறுத்தியிருந்தனர்.
அதற்கிடையில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இருந்ததால் புதிய அரசமைக்கின்ற அரசியல் செயற்பாடுகளை இடைநிறுத்தி விட்டு
நாட்டின் ஸ்திரநிலைக்காகக் கப்ரியேல் அட்டால் தலைமையிலான முன்னாள் அரசாங்கத்தையே காபந்து பதவியில் நீடிக்குமாறு மக்ரோன் பணித்திருந்தார்.
உலகளாவிய முக்கியத்துவம் மிகுந்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவைக் கருத்திற்கொண்டு அரசியல் தரப்புகள் யார் அரசமைப்பது என்ற பேரம் பேசல்கள் மற்றும் அது தொடர்பான விவாதங்களைக் கைவிட்டு சுமார் ஒரு மாத காலம் ஒரு வித அமைதியைக் கடைப்பிடித்து வந்தன. அதனை ஓர் "அரசியல் போர் ஓய்வு" என்று ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
கோடை கால ஒலிம்பிக் போட்டிகளும் கோடை விடுமுறையும் முடிவடைந்து இப்போது நாடு அதன் அடுத்த கல்வியாண்டை நெருங்குகிறது. அரசியல் செயற்பாடுகளும் களைகட்டத் தொடங்கிவிட்டன. பிரதமரோ அரசாங்கமோ இன்றி இனியும் நாட்டை இப்படியே கொண்டு நடத்த முடியாது என்ற நிலைமையில் அதிபர் மக்ரோன் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. அதனால் அவர் புதிய அரசமைப்பது தொடர்பான பேச்சுக்களை அரசியல் கட்சிகளோடு மீண்டும் தொடக்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையும் திங்கட்கிழமையுமாக இரண்டு நாட்கள் பிரதான கட்சிகளது தலைவர்களுடன் எலிஸே மாளிகையில் ஆலோசனை நடத்திய பின்னரே இடதுசாரிகளை அரசமைக்க அழைப்பதில்லை என்ற முடிவை அறிவித்திருக்கிறார்.
மிகக் குறைந்த ஆசனங்கள் வென்ற ஒரு தரப்பு ஆட்சி அமைத்து அதிகாரத்தைத் தமக்குள் தக்க வைப்பது அடுத்தடுத்த நிலைகளில் உள்ள ஏனைய தரப்புகளைச் சேர்ந்த பெரும்பான்மையான எம்பிக்களின் அதிகாரத்தை அர்த்தமற்றதாக்கிவிடும் என்று தனது முடிவுக்கு அரசுத் தலைவர்
காரணம் கூறியிருக்கிறார்.
மக்ரோனுடன் பேச்சு நடத்திய மரின் லூ பென் அணியினர், இடதுசாரிகள் தலைமையில் அமையக் கூடிய எந்த அரசையும் தாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் கவிழுப்போம் என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றனர். அதேசமயம் இடதுசாரிகளது கூட்டணிக்குள் உள்ள ஜோன் லூக் மெலன்சோனின் தீவிர இடதுசாரி சக்திகள் புதிய அரசாங்கத்தின் ஊடாக அதிகாரத்துக்கு வருவதை மக்ரோனின் மையவாதிகளும் நாட்டின் வலதுசாரிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
பிரான்ஸின் சோசலிஸக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் தீவிர இடதுசாரியாகிய ஜோன் லூக் மெலன்சோன் அவர்களது கட்சி ஆகியனவற்றை உள்ளடக்கிய பரந்து பட்ட அரசியல் கூட்டணியே புதிய மக்கள் முன்னணி (Nouveau Front populaire) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டு அதிக ஆசனங்களை வென்றிருக்கிறது.
577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைத் தக்க வைப்பதற்கு 289 ஆசனங்களாவது அவசியம். தேர்தலில் போட்டியிட்ட முக்கிய மூன்று தரப்புகளில் எதனாலும் அந்த எண்ணிக்கையை எட்டமுடியவில்லை. இடது சாரிகளது மக்கள் முன்னணி 195 ஆசனங்களுடன் முதலிடத்திலும் -
அதிபர் மக்ரோனின் ஆளுங்கட்சி அணி
164 ஆசனங்களுடன் இரண்டாம் இடத்திலும் -
மரின் லூ பென் அம்மையாரது தீவிர வலதுசாரிகள் 143 ஆசனங்களுடன் மூன்றாவது ஸ்தானத்திலும் வந்தமை வாசகர்கள் அறிந்ததே.
இந்த நிலையில் அரசமைக்கின்ற வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதால் கடும் சீற்றமடைந்துள்ள இடதுசாரித் தலைவர்கள் மக்ரோனின் ஜனநாயக விரோத செயலை எதிர்ப்பதற்கான மக்கள் போராட்டங்களைத் தொடக்கும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளனர்.
⚫தொடர்புடைய செய்தி :https://www.thasnews.com/post/ந-ர-வ-க-ச-வ-ய-ன-ப-ண-அத-க-ர-ய-ப-ரதமர-பதவ-க-க-ந-ற-த-த-க-ன-றத-இடத-ச-ர-ம-ன-னண
தாஸ்நியூஸ் - பாரிஸ்
27-08-2024
Comments