அளவுக்கு அதிகமாக
பூச்சி கொல்லி கலப்பு
புற்றுநோய் ஆபத்து!!
பாரிஸ், மே, 27
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் எவரெஸ்ட் (Everest) எம்டிஎச்(MDH) ஆகிய இரண்டு பிரபல விற்பனைப் பெயர்களிலான மசாலா தூள்களில் அளவுக்கு அதிகமாகப் பூச்சி கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்துப் பல நாடுகளில் இந்திய மசாலாத் தூள்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முதலில் சிங்கப்பூர், ஹொங்காங், நேபாளம் போன்ற நாடுகள் இந்திய மசாலா இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதித்தன. எவரெஸ்ட் கம்பனியின் மீன் கறி மசாலாவைக் கடைகளில் இருந்து மீளப் பெறுமாறு சிங்கப்பூர் அரசு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
ஹொங்கொங் பரிசோதனையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களது தயாரிப்புகளாகிய கறித் தூள்களில்
புற்றுநோயை உண்டாக்குகின்ற எத்திலீன் ஒக்சைட் (ethylene oxide)
கலந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து, நேபாளம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்த மசாலா தூள்கள் மீது சுகாதாரப் பாதுகாப்புத் தரப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூஞ்ஞை போன்ற தொற்றுக்களைத் தவிர்ப்பதற்காக மசாலாத் தூள் மூலப் பொருள்களுக்கு எத்திலீன் ஒக்சைட் பூச்சி கொல்லி சேர்க்கப்படுகிறது. இதன் அளவு மீறிய பாவனை மனிதரில் புற்றுநோயை உண்டாக்குகின்ற காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சமீப காலமாக சமையலுக்குத் தயாரான நிலையில் பொதிகளில் அடைக்கப்பட்ட பல்வேறு இந்திய மசாலாக் கறித் தூள்கள் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை உலக நாடுகள் எங்கும் உணவு வகைகளில் பரந்த அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
மசாலாத் தூள்களின் உலக வல்லரசான இந்தியா சுமார் 180 வெவ்வேறு நாடுகளுக்கு 200க்கும் மேற்பட்ட கறித் தூள் வகைகளை ஏற்றுமதி செய்கிறது என்று அதன் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட நான்கு பில்லியன் டொலர்கள் மதிப்புடைய பெரும் வர்த்தகம் ஆகும்.
சமீப காலமாக இந்த மசாலாக் கறித் தூள்கள் தொடர்பாகப் பல்வேறு
சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ள இந்திய சுகாதார அமைச்சு, இந்த உணவுப் பொருள்கள் விடயத்தில் உலகிலேயே மிகக் கடுமையான அதிகபட்ச எச்ச விளைவு வரம்புகளது (maximum residue limits-MRL) தரநிலைகளில் ஒன்றை நாடு பயன்படுத்துகிறது என்று கூறுகிறது. சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர்கள், தங்களது மசாலாத் தூள்கள் ஆரோக்கியமானவை மற்றும் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
27-05-2024
Comments