top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

இரு குழந்தைகளை வெட்டிக் கொன்றவர் காரை மரத்தில் மோதி உயிர்மாய்க்க முயற்சி!

பாரிஸ் பிராந்தியத்தின்

எஸ்ஸோனில் சம்பவம்



பாரிஸ், ஏப்ரல் 12


கார் ஒன்றின் பின்புறப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட மூன்று வயதுப் பெண் குழந்தை மற்றும்

20 மாதங்களேயான ஆண் கைக்குழந்தை ஆகிய இரு பிஞ்சுகளது உடல்களை ஜொந்தாம் பொலீஸார் மீட்டெடுத்திருக்கின்றனர்.


பாரிஸ் பிராந்தியத்தின் எஸ்ஸோன்

(Essonne) மாவட்டத்தில் Forges-les-Bains என்ற இடத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் கொலைகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


கார் விபத்துச் சம்பவம் ஒன்றை அடுத்து

அதில் காயமடைந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே அவர் தனது இரண்டு பிள்ளைகளையும் வெட்டிக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்ய முயற்சித்தமை தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாகச் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரியவருவதாவது :


வியாழக்கிழமை இரவு பதினொரு மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதுண்ட விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.


மதுபோதையில் காணப்பட்ட அவர்

தான் தனது குழந்தைகள் இருவரையும் கொன்று விட்டதாகவும் வாகனத்தை மரத்துடன் மோதித் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் அதிர்ச்சித் தகவலை

சிகிச்சையின் போது தாதியர்களிடம் கூறியிருக்கிறார். அதனால் பீதியடைந்த மருத்துவப் பணியாளர்கள் உடனடியாகப் பொலீஸாரை வரவழைத்துள்ளனர். அந்த நபர் கூறிய தகவலின் படி விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில் கார் ஒன்றின் பின்புறத்தில் குழந்தைகள் இருவரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.


பெண் குழந்தைக்கு நெஞ்சிலும் கைக்குழந்தைக்குக் கழுத்திலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. கத்தி ஒன்றையும் பொலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.


இதனையடுத்து 33 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


குழந்தைகளின் தாயாரான 32 வயதுப் பெண் அவரது சகோதரி ஒருவரது வீட்டில் பாதுகாப்பாக இருப்பது பின்னர் தெரியவந்துள்ளது. மனைவியுடனான தகராறு காரணமாகவே அந்த நபர் தனது பிள்ளைகளைக் கொன்றுள்ளார் என்பது பூர்வாங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எவ்ரி (Evry) அரச வழக்கறிஞர் அலுவலகம் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


பாரிஸின் புற நகரங்களில் சமீபகாலமாகக் குடும்ப வன்முறைகளில் ஏதும் அறியாத

அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்படும் கொடூரச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

12-04-2024


0 comments

Comentarii


You can support my work

bottom of page