தீவிர வலதுசாரிகளது
ஆட்சியில் புதிய சட்டம்
பாரிஸ், ஜூன் 26
இன்னுமொரு நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள பிரெஞ்சுப் பிரஜைகள்
நாட்டின் பாதுகாப்பு உட்பட அதுபோன்ற முக்கிய துறைகளில் உயர் பதவிகளை வகிப்பது தடுக்கப்படும்.
பிரான்ஸின் தீவிர வலதுசாரிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனை நடைமுறைப்படுத்தப்போவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தத் திட்டம் தனது நீண்ட கால விருப்பம் என்று தீவிர வலதுசாரிக் கட்சியான RN என்கின்ற Rassemblement national கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஜோர்டான் பார்டெல்லா தனது தேர்தல் திட்டங்களை அறிமுகம் செய்துவைத்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பிரான்ஸில் 3.3 மில்லியன் பேர் இரட்டைக் குடியுரிமை பெற்ற பிரெஞ்சுப் பிரஜைகளாக உள்ளனர்.
ராஜதந்திரப் பதவிகள், பாதுகாப்பு, அணுசக்தி, நிதி, வரவுசெலவுத் திட்டம் அமைச்சுக்கள், பொலீஸ் போன்ற முக்கிய துறைகளில் பணி புரிகின்ற வெளிநாட்டவர்களை இந்தக் கட்டுப்பாடு இலக்கு வைக்கின்றது.
ஜூன் 30, ஜூலை 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமராகப் பதவிக்கு
வந்தால் இரட்டைக் குடியுரிமை பெறுவதைக் கேள்விக்குட்படுத்தப் போவதில்லை என்றும் ஆனால் இன்னொரு நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் பிரான்ஸில் முக்கிய உயர் பதவிகளில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான ஆணை ஒன்றை நிறைவேற்றவுள்ளதாகவும் ஜோர்டான் பார்டெல்லா தெரிவித்திருக்கிறார்.
மரின் லூ பென் அம்மையார் கடந்த 2022 ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில்
பிரெஞ்சுக் குடியரசையும் பிரான்ஸின் அடையாளங்களையும் பாதுகாக்கின்ற தனது கொள்கைகளின் கீழ் இரட்டைக் குடியுரிமைபெற்றுள்ள பிரெஞ்சுப் பிரஜைகள் நாட்டின் அதி முக்கிய துறைகளில் உயர் பதவிகளை வகிப்பது தடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனையே அவரது கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஜோர்டான் பார்டெல்லா இப்போது மீண்டும் நினைவூட்டியிருக்கிறார்.
ஆயினும் எந்தெந்தத் துறைகளில் பதவி வகிப்பது தடுக்கப்படும் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
பிரான்ஸில் அரபுக்கள், யூத இனத்தவர்கள் மற்றும் அமெரிக்கர்கள் சீனர்கள் போன்ற வெளிநாட்டவர்கள் பிரெஞ்சுக் குடியுரிமைமையுடன் சில முக்கிய துறைகளில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் வேறு நாடுகளது குடியுரிமை வைத்திருக்கின்ற பிரெஞ்சுக்காரர்களும் இவ்வாறான பதவிகளில் உள்ளனர்.
பிரான்ஸின் அரசமைப்பும் ஐரோப்பியச் சட்டங்களும் இரட்டைக் குடியுரிமையையும் அவற்றை வைத்திருப்பவர்களது அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்துகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
26-06-2024
Comments