நீச்சல் குடும்ப வாரிசு
லேயோன் மார்ஷொன்
வரலாற்றுச் சாதனை!!
பாரிஸ், ஓகஸ்ட் 1
பிரான்ஸின் விளையாட்டுத் துறையில் "அருமையான பிள்ளை " என்று செல்லமாக அழைக்கப்பட்டுவந்தவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பெரும் ஜாம்பவனாக மாறியிருக்கிறார்.
துளுஸில் மே 17, 2002 இல் பிறந்த 22 வயதான வாலிபர் லேயோன் மார்ஷொன் (Léon Marchand) பாரிஸ் ஒலிம்பிக்கைத் தனது அபார திறமையால் அதிரவைத்திருக்கிறார்.
போட்டிகளை நடத்துகின்ற தாய்நாட்டைப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கின்றார்.
ஏற்கனவே இளம் நீச்சல் நட்சத்திரமாக ஜொலித்துவருபவர்.fourstrokes, breaststroke மற்றும் butterfly நீச்சல் கலைகளில் நிபுணன். நீச்சல் விளையாட்டு வீரர்களைப் பெற்றோர்களாகவும் உறவினர்களாகவும் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து வந்த வாரிசு.
லேயோனின் தந்தையார் சேவியர் மார்ஷொன் (Xavier Marchand) 1996,2000 ஆம் ஆண்டுகளின் ஒலிம்பிக் இறுதிப் போட்டியாளர். தாயார் செலீன் போனே (Céline Bonnet) 1992 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் நீச்சல் போட்டியாளர். லேயோனின் மாமனார் கிறிஸ்தோப் மார்ஷொனும் மற்றும் இளைய சகோதரர் ஒஸ்கார்(Oscar) ஆகியோரும் நீச்சல் வீரர்கள் ஆவார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் லியோன் நிகழ்த்திய அசுர சாதனைகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை நிகழ்த்தப்பட்டிராத சாதனைகளாகப் பதிவாகின்றன.
இந்த வாரத் தொடக்கத்தில் 400m medley நீச்சலில் சாம்பியனாக வந்த
லேயோன், நேற்றைய தினம் இரண்டு மணி நேரங்களுக்குள் நடைபெற்ற 200m butterfly மற்றும் 200m breaststroke
போட்டிகளிலும் வென்று இரட்டைத் தங்கப் பதக்கங்களைத் தனதாக்கித் தேசம் முழுவதையும் வெற்றிப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
நாட்டின் தேசிய கீதம் இரண்டு தடவைகள் இசைக்க அவர்
இரண்டு தங்கப்பதக்கங்களைச் சூடிக் கொண்ட காட்சி சர்வதேச அரங்கில் பிரான்ஸைப் பெருமைப்படுத்தியிருக்கிறது.
லேயோன் மார்ஷொன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 400m medley
போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனாக முடிசூடியதன் மூலம் முன்னாள் நீச்சல் சம்பியன்களான Marie-José Pérec, Tony Estanguet மற்றும் Teddy Riner போன்ற ஜாம்பவான்களுக்கு நிகரான நிலையை எட்டியிருந்தார்.ஆனால் கோடைகால ஒலிம்பிக் போட்டி ஒன்றில் ஒரே தடவையில் மூன்று போட்டிகளில்
அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகள் அவரது வழிகாட்டிகளான இந்த மூவரையும் விட அவரை ஒருபடி முன்னே கொண்டுசென்று நிறுத்தியுள்ளன.
லேயோனுக்கு இன்னமும் போட்டிகள் காத்திருக்கின்றன. அவரது அதிரவைக்கும் வெற்றிகளைக் காண விளையாட்டு உலகம் விறுவிறுப்புடன் காத்திருக்கிறது.
இன்றைய தினம் இந்தச் செய்தியை வரையும் போது சில நாடுகள் பெற்றிருந்த பதக்க விவரங்கள் வருமாறு :
தாஸ்நியூஸ் - பாரிஸ்
01-08-2024
Comments