top of page
Post: Blog2_Post

இரண்டாம் சுற்றுப் போட்டியிலிருந்து 200 வேட்பாளர்கள் விலகினர்!

மக்ரோன் தரப்பும்

இடதுசாரிகளும்

ஒன்றுபட்ட உத்தி!


பாரிஸ், ஜூலை 2


தீவிர வலதுசாரிகளுக்குப் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைப்பதைத் தடுப்பதற்காக எதிரணிகளைச் சேர்ந்த சுமார் 200

வேட்பாளர்கள்வரை போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.


முதற்சுற்று வாக்களிப்புக்குப் பின்னர்

மக்ரோன் அணியினதும் இடதுசாரி முன்னணியினதும்(Nouveau Front populaire) வேட்பாளர்கள்

முதலிடத்தில் அல்லது வெல்லும் வாய்ப்புகளுடன் இருக்கின்ற தொகுதிகளிலேயே இரண்டாவது சுற்றில் அவர்களில் ஒருதரப்பு வெற்றியீட்டுவதை உறுதிப்படுத்துவதற்காக மறு தரப்பின் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து தந்திரோபாயமாக விலகிவருகின்றனர்.


33.15%வாக்குகளுடன் முதனிலை பெற்றுள்ள மரின் லூ பென் மற்றும் ஜோர்டான் பார்டெல்லாவின் கட்சியைச்

(Rassemblement national - RN) சேர்ந்த 39 வேட்பாளர்கள் தமது தொகுதிகளில் ஐம்பது வீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று ஏற்கனவே எம்பிக்களாகத் தெரிவாகிவிட்டனர். ஏனைய பல

இடங்களில் அவர்கள் முதனிலையில் அல்லது இரண்டாவது இடத்தில் உள்ளனர். நாடெங்கும் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அந்தக் கட்சி ஆகக் கூடிய ஆசனங்களைக் கைப்பற்றும் நிலையில் இருந்தாலும் அறுதிப் பெரும்பான்மைக்கான இடங்களைக் கைப்பற்ற இரண்டாவது சுற்றில் அவர்கள் மேலும் வாக்குகளைக் கவரவேண்டி உள்ளது.


577 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெறுவதற்கு 289 உறுப்பினர்கள் தெரிவாக வேண்டும்.


நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரம் கிடைத்தால் மாத்திரமே பிரதமர் பதவியை ஏற்பார் என்று தீவிர வலதுசாரிகளின் பிரதமர் வேட்பாளர் ஜோர்டான் பார்டெல்லா ஏற்கனவே திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.


பிரான்ஸின் இரண்டு கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில்

வேட்பாளர் ஒருவர் முதற்சுற்றிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட வேண்டுமானால் அவர் தனது தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்-


அவ்வாறு எவரும் வெற்றி பெறாத தொகுதிகளில் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு ஏற்பாடு செய்யப்படும்.


முதற்சுற்றிலே முதல் இரு இடங்களைப் பெறுகின்ற வேட்பாளர்களும் அதே தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 12.5% வீதத்துக்கும் அதிகமானோரது வாக்குகளைப் பெற்றவர்களும் இரண்டாவது சுற்றில் போட்டியிடுவர். ஆகவே ஒரு தொகுதியில் இருந்து இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இரண்டாவது சுற்றில் போட்டியிடவாய்ப்புண்டு.


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றில்

தீவிர வலதுசாரி வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்த நிலைகளில் இருக்கின்ற

மக்ரோன் அணியினதும், இடதுசாரி வெகுசன முன்னணியினதும் வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகித் தங்களுக்குள் ஒரு தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிப்பதன் மூலம் தீவிரவலதுசாரிக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுவதைத் தடுக்க முடியும். ஐனநாயகத் தேர்தல் அரசியல் அறத்தின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு நேர்மைதவறிய செயலாகக் கொள்ளப்படலாம்.


இந்த உத்தியை நோக்கமாகக் கொண்டு ஞாயிறன்று நடைபெறவுள்ள இரண்டாவது இறுதிச் சுற்று வாக்களிப்பில்

ஜீன் லுக் மெலோன்சோன் தலைமையிலான தீவிர இடதுசாரிகளை உள்ளடக்கிய புதிய வெகுசன முன்னணியோடு தொகுதிகள் மட்டத்தில் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மறைமுகக் கூட்டுச் சேர்ந்து செயற்பட மக்ரோன் தரப்பு பேச்சுக்களை நடத்தி வருகிறது என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.


முதற்சுற்று வாக்களிப்பில் 28.14%வாக்குகளால் இரண்டாவது இடத்துக்கு வந்த புதிய வெகுசன முன்னணியும், 20.76 %சதவீத வாக்குகளால் மூன்றாம் நிலையில் இருக்கின்ற மக்ரோனின் மையவாத அணியும் ஏற்கனவே முதனிலையில்

உள்ள தீவிர வலதுசாரிகளுக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை கிட்டுவதைத் தடுப்பதற்கான தீவிர பரப்புரைகளைத் தொடக்கியுள்ளன.


அடுத்த சுற்றில் மரின் லூ பென் அணிக்கு ஒரு வாக்குக் கூடக் கிடைக்க விடக் கூடாது என்பதில் இரண்டு தரப்புகளும் கங்கணம்கட்டிக்கொண்டு நிற்கின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

02-07-2024






0 comments

Comments


You can support my work

bottom of page