top of page
Post: Blog2_Post

இலங்கை, இந்தியச் சிப்பந்திகளுடன் பயணித்த கப்பல் ஏவுகணை வீச்சுக்கு இலக்கு! இருவர் பலி!!


ஏடன் வளைகுடாவில்

யேமன் ஹூதிக்களது

தாக்குதலில் சிக்கியது

(படம் :தாக்கப்பட்ட கப்பலின் பழைய பைல் படம்)



செங்கடல் ஊடாகப் பயணிக்கின்ற சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ஆதரவுத் தீவிரவாதிகள் நடத்திவருகின்ற தாக்குதல்களில் முதல் முறையாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.


இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் 23 பேருடன் பயணித்த கப்பல் ஒன்று இன்று புதன்கிழமை ஏவுகணை வீச்சுக்கு இலக்கானது என்று அறிவிக்கப்படுகிறது. அதனால் கப்பல் தீப்பற்றியுள்ளது. குறைந்தது இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆறு பேர்வரை தீக்காயங்களுக்கு உள்ளாகினர் எனவும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.


லைபீரியா நாட்டில் பதிவு செய்யப்பட்டு

பார்படோஸ் கொடி பறக்கவிடப்பட்ட "எம்வி றூ கொன்பிடென்ஸ்" (MV True Confidence) என்ற கப்பலே ஏடன் வளைகுடாவில்(Gulf of Aden) யேமன் நாட்டின் தென்பகுதிக் கரையோரத்தில் வைத்துத் தாக்கப்பட்டிருக்கிறது. அது சீனாவில் இருந்து இரும்பு மற்றும் வாகனங்களை ஏற்றிக் கொண்டு சவுதி அரேபியாவுக்குச் சென்றுகொண்டிருந்தது என்று கூறப்படுகிறது.


ஹூதி தீவிரவாதிகளது பால்டிக் ஏவுகணை ஒன்று தாக்கியதை அடுத்துக் கப்பலில் தீ பரவியது என்று செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 15, பேர், நான்கு வியட்நாமியர்கள், இரண்டு இலங்கையர்கள், ஒர் இந்தியர், மற்றும் நேபாளம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட்ட 23 பணியாளர்கள் அந்தக் கப்பலில் இருந்துள்ளனர். அவர்களில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் எதுவும்

இந்தச் செய்தியை எழுதும் வரை உறுதிப்படுத்தப்படவில்லை.


கப்பல் தீப்பற்றியதை அடுத்து உயிர்பிழைத்த சிப்பந்திகள் அனைவரும் அதனைக் கைவிட்டு உயிர்காப்புப் படகுகள் மூலம் தப்பி வெளியேறியுள்ளனர்.


அந்தக் கப்பல் தங்களது கடற்படையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டுப் பயணித்ததாலேயே அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஹூதிக்கள் தரப்பில் இருந்து உரிமைகோரி விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


தொடர்புடைய செய்தி இணைப்புகள் :




 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

06-03-024

0 comments

Comments


You can support my work

bottom of page