top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

இலங்கை,இந்தியரை பிரான்ஸுக்கு கடத்தி கறுப்புப்பண மோசடி!குற்றக் கும்பல் கைது!

Updated: Nov 30


ஐரோப்பிய பொலீஸ் வேட்டை

தமிழர் உட்பட 26 பேர் சிக்கினர்


பாரிஸ், நவம்பர் 29


இலங்கை, இந்தியா, நேபாளம் போன்ற தென்னாசிய வட்டகை நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களைச் சட்டவிரோதமான வழிமுறைகளில் பிரான்ஸுக்குக் கடத்தும் செயலில் நீண்ட காலம் ஈடுபட்டுவந்த பெரும் குற்றக்கும்பல் ஒன்றின் வலைமைப்பைக் கண்டுபிடித்து அதனை இல்லாதொழித்துள்ளதாகப் பிரெஞ்சுப் பொலீஸ் அறிவித்திருக்கிறது.


கைதானவர்களில் குடியேறிகளைக் கடத்துகின்ற இந்த வலையமைப்பின் நிதி மோசடிகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படுகின்ற தமிழ் மதகுரு ஒருவரும் அடங்கியுள்ளார் என்றும் - பாரிஸ் புறநகரப் பகுதியாகிய Seine-Saint-Denis இல் அமைந்தள்ள தனது ஆலயத்தை நிதி வசூல் பண்ணும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளார் எனவும் "ஈரோபொல்" அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த வலையமைப்பில் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் ஈரோ விற்றுவரவு பெற்றுவந்த சட்டவிரோத தங்க ஆபரண

இடைத் தரகர்கள் சிலருக்கும் தொடர்புள்ளது எனவும் அவர்களில் சிலரும் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஐரோப்பியப் பொலீஸின்(Europol) உதவியுடன் பிரான்ஸின் எல்லைக் காவல் பொலீஸ் பிரிவினரால்(border police - PAF) இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தொடராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில்

பாரிஸ் பிராந்தியத்தில் 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 11 மில்லியன் ஈரோக்கள் பெறுமதியான கறுப்புப் பணம் மற்றும் தங்க நகைகள், சொகுசு வாகனங்கள் உட்படப் பெருமளவான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இந்தக் குற்ற வலையமைப்புக்குத் தலைமை வகித்தவர் எனக் கூறப்படுகின்ற முக்கிய நபர் ஒருவர் டுபாயில் கைதாகியுள்ளார். அவரை பிரான்ஸுக்கு நாடுகடத்துமாறு அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர்.

வலையமைப்பினால் போலியான பெயரில் இயக்கப்பட்ட கம்பனிகள் ஊடாக சுமார் 200 மில்லியன் ஈரோக்கள் கறுப்புப் பணம் கையாளப்பட்டுள்ளது என்றும் -


கைதானவர்களில் மூவர் கட்டட நிர்மாணக் கம்பனிகளை நடத்திவந்த வர்கள். அவர்கள் உட்பட 15 பேர் பாரிஸ் பொபினி நீதிமன்றத்தில் (Bobigny prosecutor's office in Seine-Saint-Denis) நேற்று வியாழக்கிழமை முன்னிறுத்தப்பட்டபின் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் குழு உல்லாசப் பயணிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கானவர்களை சட்டவிரோதமான பயண ஆவணங்கள் மூலம் நாட்டுக்குள் கடத்தி வந்துள்ளது. - அதன் மூலம் பெற்ற பெருந்தொகைக் கறுப்புப் பணத்தை சட்டரீதியானதாக மாற்றுவதற்காக மோசடியான பெயரில் கம்பனிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உணவு வவுச்சர்கள்(meal vouchers) கிறிப்டோ நாணயம்(cryptocurrency) போன்ற வழிமுறைகளில் கறுப்புப் பணம் கை மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னர் சிக்கியிராத மிகப் பரந்துபட்ட மோசடி வலையமைப்பு இது என்றும்,-இதன்மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் மிக நீண்ட காலமாகப் பயனடைந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது என்றும் - பிரெஞ்சு எல்லைப் பொலீஸ் படையின் பாரிஸ் விமான நிலையப் பிரிவின் பொறுப்பதிகாரி (head of the border police at Roissy Charles-de-Gaulle airport) செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.


இந்தக் கூட்டுப் பொலீஸ் வேட்டையில்

28 வீடுகள், பத்துக் கடைகள் மற்றும் வியாபார மையங்கள் சோதனையிடப்பட்டுள்ளன என்றும் பிரெஞ்சு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

29-11-2024

0 comments

Comments


You can support my work

bottom of page