top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

இளவரசியின் புற்றுநோய் : அது இளவயதினரிடையே அதிகரிப்பதன் ஓர் அடையாளம்

மருத்துவ நிபுணர்கள் கருத்து


பாரிஸ், மார்ச் 25


இளவரசி கேற் ஹிமில்டனுக்கு புற்று நோய் ஏற்பட்டிருப்பது பற்றிய செய்தி வெள்ளிக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து இங்கிலாந்து எங்கும் அது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதற்கு அவரது வயதும் காரணமாகும்.


42 வயதான கேற்றின் புற்று நோய் உலகெங்கும் 50 வயதுக்குக் குறைந்தவர்களிடையே"தொற்றுநோய்" போல் அதிகரித்து வருகின்ற இந்தக் கொடிய நோயின் கவலைக்குரிய புதிய போக்கைக் காட்டுவதாக பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் புற்றுநோயியல் நிபுணர் ஷிவன் சிவகுமார் (Shivan Sivakumar) ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.


இளவரசி கேற் வயிற்றில் செய்துகொண்ட சத்திர சிகிச்சையின் போதே புற்றுநோய் அணுக்கள் தெரியவந்துள்ளன. அதனை அடுத்தே

தற்காப்பு ஹீமோதெரபி சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளார்.

எந்த வகையான புற்றுநோய் அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளது என்ற விவரம் வெளியிடப்படாவிடினும் அது பெரும்பாலும் வயிற்றுப் புற்றுநோயாகவே இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


"காரணம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நாங்கள் அதிகமாகப் பார்க்கின்றோம்" - என்று மருத்துவநிபுணர் ஷிவன் சிவகுமார் சுட்டிக்காட்டுகின்றார்.


வயிற்றுப் புற்றுநோய்க்கான சரியான காரணம் தெரியவராவிடினும் உடற்பருமன், மது அருந்துதல், புகைத்தல் மற்றும் நவீன வாழ்க்கை

முறைகள், இரசாயனப் பொருள்களின் அதிகரித்த பாவனை

சூழல் மாசு போன்றன புற்று நோய்களுக்கான காரணிகளாகச் சொல்லப்படுகின்றன.


இதேவேளை ஏஎப்பிக்குப் பேட்டி அளித்துள்ள புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் அன்றூ பெக்ஸ் (Andrew Beggs) -


இளவயதினரிடையே தோன்றும் புற்று நோய்கள் அரிதானவை அல்ல என்று கூறியிருக்கிறார்.


" வளர்ந்தவர்களுக்கான ஆரம்பகட்ட புற்றுநோயாளர் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்திவருகின்றேன். நாற்பது வயதுகளில் புற்றுநோய் ஏற்பட்ட மிகப் பலரை நாங்கள் அங்கு பார்க்கின்றோம்" - என்று அவர் எச்சரிக்கிறார். அதேசமயம் புற்றுநோயியல் இருந்து மீண்டுவிடுவோரில் அதிகமானோராக இளவயதினரே உள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.


பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையில் (British medical journal) கடந்த வாரம் வெளியான ஒர் ஆய்வறிக்கை, இங்கிலாந்தில் 35 தொடக்கம் 69 வயது வரையானவர்கள் மத்தியில் ஏற்படுகின்ற புற்றுநோய்கள் கடந்த 25 ஆண்டுகளில் அதிகரித்துள்ளன என்று தெரிவிக்கிறது.


மன்னர் சார்ள்ஸைத் தொடர்ந்து இளவரசி கேற்றும் தனது அறுவைச்

சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட புற்றுநோய்த் தடுப்பு ஹீமோதெரபிச் சிகிச்சையைப் (“preventive chemotherapy”) பெற்றுவருகின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.


⚫முன்னர் வந்த செய்திகள்


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

25-03-2024










0 comments

תגובות


You can support my work

bottom of page