அமைதிப்படை மீதான
தாக்குதலால் பதற்றம்
பாரிஸ், ஒக்ரோபர், 15
இஸ்ரேல் என்ற நாடு உருவாகியதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமே
காரணமாக அமைந்தது என்பதைப் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகு ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
பிரான்ஸின் அதிபர் மக்ரோன் இவ்வாறு கூறியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது
லெபனான் நிலைவரம் தொடர்பாக
ஆராயப்பட்டிருக்கிறது. அதன் போதே
மக்ரோன் இஸ்ரேல் பிரதமருக்கு இதனை நினைவுபடுத்தியிருக்கிறார்.
இத்தகவலை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
பாரிஸ் பத்திரிகை ஒன்றிடம் வெளியிட்டிருக்கின்றனர்.
பாலஸ்தீனத்தை யூத நாடாகவும், அரபு நாடாகவும் இரண்டாகப் பிரிப்பதற்கான
வாக்கெடுப்பு ஐ. நா. பொதுச் சபையில் 1947 நவம்பர் மாதம் நடைபெற்றது. அதனை நினைவுறுத்தியே மக்ரோன் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படையினருக்கும் ஐ நா. அமைதிப் படையினருக்கும் இடையே கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.அமைதிப் படையை அங்கிருந்து வெளியேற்றுமாறு பிரதமர் நத்தன்யாகு ஐ. நா. செயலரைக் கேட்டிருக்கிறார். இவ்வாறான ஒரு நெருக்கடி மிக்க சமயத்திலேயே மக்ரோனின் இந்தக் கருத்து வெளியாகி இருக்கிறது.
இஸ்ரேல் தெற்கு லெபனானுக்குள் தரைவழியாக இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் போது அங்கே நிலைகொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படை நலைகள் மீதும் வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளது வீரர்கள் பங்குபற்றும் அமைதிப்படை
மீது இஸ்ரேல் வேண்டும் என்றே தாக்குதல்களை நடத்திவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த ஞாயிறன்று தங்களது தளம் ஒன்றின் வாயிலை இஸ்ரேலிய டாங்கிகள் வலோத்காரமாகத் தகர்த்து உள்நுழைந்த சம்பவத்தை லெபனுக்கான ஐ. நாவின் இடைக்காலப் படை (UNIFIL - United Nations Interim Force in Lebanon) கடுமையாகக் கண்டித்துள்ளது.
அமைதிப்படையினர் மீதான தாக்குதல்களை பிரான்ஸ் பொறுத்துக் கொள்ளாது என்று மக்ரோன் ஏற்கனவே இஸ்ரேலை எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பலரும் இஸ்ரேலின் செயலைக் கண்டித்துள்ளனர்.
இதேவேளை - லெபனானுக்கு ஆதரவான நாடுகள் பங்குகொள்ளும் அமைச்சர்கள் மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 24 ஆம் திகதி பாரிஸில் நடைபெறவிருக்கிறது. பெய்ரூட் நகரம் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கள் தீவிரமாக இடம்பெற்றுவரும் வேளையில் கூட்டப்படுகின்ற இந்த மாநாட்டில் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குதல், இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமான ராஜதந்திர நடவடிக்கைகள் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
⚫தொடர்புடைய செய்திகள் :
தாஸ்நியூஸ் - பாரிஸ்
15-10 - 2024
Comments