top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஈபிள் ரவர் அருகே சவப் பெட்டிகளை வைத்துச் சென்ற மூவர் கைது!

வெளிநாட்டு நாச வேலையா?

பாரிஸ் பொலீஸ் விசாரணை


பாரிஸ், ஜூன் 2


பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்துக்கு மிக அருகே வீதியோரம் காணப்பட்ட ஐந்து முழு அளவிலான பிரேதப் பெட்டிகளைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர்.


கோபுரத்தின் அடியில் Jacques-Chirac Quay பக்கமாக நேற்று ஜூன் முதலாம் திகதி காலை இந்தச் சவப் பெட்டிகளை ஈபிள் கோபுரப் பணியாளர்கள் முதலில் கண்டுள்ளனர். உடனடியாகப் பொலீஸார் அங்கு அழைக்கப்பட்டனர். ஐந்து சவப் பெட்டிகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தன.பிரெஞ்சுக்கொடி சுற்றப்பட்டிருந்தது. அவற்றின் மீது"உக்ரைனில் உயிரிழந்த பிரெஞ்சு வீரர்கள்"(soldats français morts en Ukraine") என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் பாரிஸ் செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன.


அறிவியல் பொலீஸ் பிரிவினர் பெட்டிகளை நுணுக்கமாகச் சோதனை செய்தபின் அவை அங்கிருந்து அகற்றப்பட்டன.


இந்தச் சம்பவம் தொடர்பாக வாகனச் சாரதி ஒருவரைப் பொலீஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். வேறு இரண்டு பேரை அவர் அந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் பஸ்ஸில் ஜேர்மனிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் மூவரும் பல்கேரியா, உக்ரைன், ஜேர்மனி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பரீஷியன் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.


பாரிஸின் மிக முக்கிய உல்லாசப் பயண மையத்தில் புரியப்பட்ட இந்தச் செயலின் பின்னணியில் உக்ரைன் போரில் பிரான்ஸின் தலையீடுகளை எதிர்க்கின்ற தரப்பினர் அல்லது வெளிநாடு ஒன்று இருக்கலாம் என்ற கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.


போரில் உக்ரைன் தோற்கின்ற நிலை ஏற்பட்டால் பிரான்ஸின் இராணுவம் அங்கு அனுப்பப்படுவதை நிராகரிக்க முடியாது என்று அதிபர் மக்ரோன் தொடர்ந்து வலியுறுத்தி வருவது தெரிந்ததே. அதேசமயம் நோட்டோ நாடுகள் வழங்கிய ஆயுதங்களை ரஷ்ய நில எல்லைப்பரப்புக்குள் பாவிக்கலாம் என்ற அனுமதியை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

2-06-2024


0 comments

Comments


You can support my work

bottom of page