மோசமான காலநிலை
மீட்புப் பணிகள் தீவிரம்
பாரிஸ், மே, 19
ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) ஆகியோர் பயணித்த ஹெலிகொப்ரர் அணி கடும் பனி மூட்டத்தில் சிக்கியுள்ளது. அதிபரது ஹெலி வலிந்து தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் விபத்துக்குள்ளாகியது எனவும் ஒன்றுக்கொன்று முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் - அஜர்பைஜான் எல்லையோர மலைப்பிராந்தியத்தின் மேலே பறந்துகொண்டிருந்தசமயத்திலேயே
இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
அதிபரைத் தேடும் பணி முழு வீச்சில் இடம்பெற்றுவருகிறது எனச் செய்தி ஏஜென்ஸிகள் அறிவித்துள்ளன.
சவாலான கடும் காலநிலைக்கு மத்தியில் சுமார் 40 மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபட்டிருக்கின்றன என்று ஈரானிய செம்பிறைச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
படம் :கடைசி நிமிடங்களில் ஹெலியில் அதிபரது காட்சி - - - -
அதிபரது விமான அணியில் இடம்பெற்றிருந்த மூன்று ஹெலிக்கொப்ரர்களில் ஒன்று நாட்டின் வட பகுதியில் கடுமையான பனி மூட்டத்தில் சிக்கியதை அடுத்து வலிந்து தரையிறக்கப்பட்டிருக்கிறது
என்று நாட்டின் அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
மோசமான காலநிலை காரணமாகக் ஹெலிக்கொப்ரர் தரையிறக்கப்பட்ட பகுதியைச் சென்றடைய முடியவில்லை என்று ஈரானிய உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
அதிபரும் அவரது குழுவினரும் அஜர்பைஜான் எல்லையோரம் நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டு ஒன்றைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பிய வழியிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
அதிபர் பத்திரமாக மீண்டுவர வேண்டி ஈரானிய மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடுகினற காட்சிகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா, அஜர்பைஜான், ஈராக், ஆர்மீனியா போன்ற நாடுகள் ஈரானிய அதிபரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான பணிகளுக்கு உதவ முன்வந்துள்ளன.
நெருக்கடியான இந்த சமயத்தில் ஈரானிய மக்களோடு கைகோர்த்து நிற்பதாக அறிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
ஈரானிய அதிபரும் அவரது அணியினரும் பத்திரமாக மீண்டு வருவார்கள் என்ற செய்திக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பதாக துருக்கியின் அதிபர் எர்டோகன் பதிவிட்டிருக்கிறார்.
உள்ளூர் நேரப்படி இரவு வேளை இந்தச் சம்பவம் நடந்திருப்பதால் வான் வழியான தேடுதல்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
19-05-2024
Comments