top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஈரானிய ட்ரோன்கள் இஸ்ரேலை நோக்கி கிளம்பின! வான் பரப்பு மூடப்பட்டது!!

வெள்ளை மாளிகையில்

பைடன் அவசர கூட்டம்


பாரிஸ், ஏப்ரல் 14


ஈரான் இஸ்ரேலை நோக்கி அதன் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடக்கியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்திருக்கிறது.

டசின் கணக்கான ட்ரோன்கள் புறப்பட்டுள்ளன என்றும் அவை இஸ்ரேலிய நிலைகளை வந்து தாக்குவதற்கு இன்னமும் சில மணிநேரம் எடுக்கும் என்றும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.


ஈரானிய அரச தொலைக்காட்சியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


இஸ்ரேலிய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு தாண்டி ஞாயிறு அதிகாலை ஒரு மணியளவிலேயே ஈரானிய ட்ரோன்கள் இஸ்ரேல் எல்லையை வந்தடையலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர்.


நாடு முழு உஷார் நிலையில் இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

நாட்டை வந்தடைவதற்கு முன்பாகவே இடைவழியில் போர் விமானங்கள் மூலம் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு வசதியாக இஸ்ரேல் அதன் வான் பரப்பை மூடியிருக்கிறது. சிவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் நேரடியான தாக்குதல்களை எதிர்பார்த்து ஏற்கனவே அங்கு முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

பாதுகாப்புக் கருதி பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.


இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கு மேற்பட்ட ட்ரோன்கள் செலுத்தப்பட்டுள்ளன என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீண்ட தூரம் பல மணி நேரம் பறந்து வந்து அவை இஸ்ரேலிய நிலைகளைச் சரிவரத் தாக்குமா?


பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ளனர்.


ஈரான் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சாதனங்களைத் திசை திருப்பும் உத்தியாகவே முதலில் ட்ரோன்களைச்

சகட்டுமேனிக்கு ஏவித் தாக்குகின்றது.

அடுத்த கட்டமாக ஏவுகணைகளைக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல்கள் இடம்பெறலாம் - என்று அவர்கள கணிக்கின்றனர். ஈரானின் தாக்குதல் ஆரம்பித்துள்ளதை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையின் அவசரகால அறையில் தேசிய பாதுகாப்பு அணியினருடன் அவசர கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்று சிஎன்என் செய்தி வெளியிட்டிருக்கிறது.


சிரியாத் தலைநகர் டமாஸ்கஸில் அமைந்திருந்த ஈரானியத் தூதரகக் கட்டடத் தொகுதி மீது அண்மையில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடக்கும் என்று

ஈரானிய ஆன்மீகத் தலைவர் எச்சரித்திருந்தார். ஈரானின் நேரடியான தாக்குதல்களை எதிர்கொள்வதற்குத் தமது நாடு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நத்தன்யாகுவும் அறிவித்திருந்தார். இதனால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியிருந்தது. அந்த நிலையிலேயே ஈரானின் தாக்குதல்கள் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


முன்னதாக ஈரானியப் புரட்சிக் காவல் படைகள் செங்கடலில் இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்குக் கப்பல் ஒன்றனுள் ஹெலி மூலம் குதித்து அந்தக் கப்பலைக் கைப்பற்றியிருந்தன.



⚫பிந்திய செய்திகளுக்குத் தாஸ்நியூஸ் செய்திச் சேவையுடன் இணைந்திருங்கள்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

14-04-2024

0 comments

Comments


You can support my work

bottom of page