பாரிஸில் இன்று நடந்த
உணர்வுபூர்வ நிகழ்வு
படம் : நன்றி சொக்கலிங்கம் விஜிதன்
பாரிஸ், ஜூலை 15
பாரிஸ் நகரில் இரண்டாவது நாளாக இன்றும் ஒலிம்பிக் தீப்பந்த பவனி இடம்பெற்றிருக்கிறது. இன்றைய அஞ்சல் ஓட்டத்தின் இடையே பிரபல வெதுப்பக உணவுத் தயாரிப்பாளர் தர்ஷன் செல்வராஜா தீபம் ஏந்தினார். பாரிஸ் 20 நிர்வாகப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற அந்த உணர்வுபூர்வ நிகழ்வு பாரிஸ் வாழ் தமிழர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தர்ஷனின் அஞ்சல் ஓட்டம் நடந்த தெருவில் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் திரண்டிருந்தனர்.
இலங்கையில் இருந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்து வந்தவர் தர்ஷன். உணவகம் மற்றும் வெதுப்பகத் துறைகளில் ஈடுபட்ட அவர், கடந்த ஆண்டு பாரிஸில் வெதுப்பகங்கள் இடையே நடத்தப்பட்ட மிகச் சிறந்த பக்கற் பாண் தயாரிக்கின்ற போட்டியில் வென்றார் அவரது Au levain des Pyrénées என்ற வெதுப்பகம் முதலிடம் பெற்றது. அதற்காக அவர்
பாரிஸ் நகரசபையால் கௌரவிக்கப்பட்டார். பாரிஸில் ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்துவதற்காகத் நகரசபை தெரிவுசெய்த 345 பேரில் தர்ஷனும் ஒருவராவார்.
இதேவேளை -
ஒலிம்பிக் தீப்பந்தம் இன்றைய தினம்
ஈபிள் கோபுரத்தின் உச்சிக்கும் ஏந்திச் செல்லப்பட்டது. கடந்த ரோக்கியோ ஒலிம்பிக்கில் 63 கிலோ ஜூடோ விளையாட்டு சாம்பியனான Clarisse Agbegnenou கோபுர உச்சியில்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தலைவர் ரொனி எஸ்தான்கே சகிதம் தீப்பந்தத்தை ஏந்தி நின்றார்.
மேலும் செய்திகள் கீழ் உள்ள இணைப்புகளில்.. .
தாஸ்நியூஸ் - பாரிஸ்
15-07-2024
Comments