top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

உக்ரைனுக்கு தரைப் படைகளை அனுப்பும் சாத்தியத்தை மீளவும் உறுதிப்படுத்தினார் மக்ரோன்!

கீவ் கேட்டுக்கொண்டால்

இது சட்டபூர்வமாக எழும்


"த எக்கனமிஸ்ட்" சஞ்சிகைக்கு

அளித்த செவ்வியில் கருத்து


பாரிஸ், மே 2


அதிபர் மக்ரோன், உக்ரைனுக்குத் தரைப் படைகளை அனுப்பவேண்டிய சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று மீண்டும் தெரிவித்திருக்கிறார்.


ரஷ்யா உக்ரைனின் முன்னரங்குகளை உடைத்து முன்னேறினால்,- உக்ரைன் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் - இந்த விடயம் நம்முன்னே சட்டபூர்வமானதாக எழும் - என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


மொஸ்கோ உக்ரைன் மீது புதிதாகப் பெரும் தாக்குதலை ஆரம்பிப்பதற்குத் தயாரான விளிம்பில் உள்ளது என்று அவதானிகள் எச்சரித்துள்ள பின்னணியிலேயே மக்ரோனின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.


இங்கிலாந்தின் "த எக்கனமிஸ்ட்" (the Economist) சஞ்சிகைக்கு மக்ரோன் வழங்கியுள்ள செவ்வி இன்று வியாழக்கிழமை வெளியாகி உள்ளது. அந்த செவ்வியிலேயே தரைப்படை விவகாரத்தை மீளவும் உறுதிப்படுத்தி கருத்து வெளியிட்டிருக்கிறார்.


அதிபர் மக்ரோன் கடந்த வாரம் சொர்போன் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய ஒரு முக்கிய பேருரையில்,

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள ஆக்கிரமிப்பை அடுத்து எழுந்துள்ள அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பா மரணத் தறுவாயில் உள்ளது. அது பகுதியளவில் இறந்துவிடும் என்று கூறியிருந்தார். அதன் பின்னரே அவர் இந்த செவ்வியை வழங்கினார் என்று "த எக்கனமிஸ்ட்" சஞ்சிகை தெரிவித்துள்ளது.


தேவைப்பட்டால் உக்ரைனக்குத் தரைப்படைகளை அனுப்பவேண்டி வரலாம் என்பதை மறுக்க முடியாது என்று ஓரிரு மாதங்களுக்கு முன்பு மக்ரோன் வெளியிட்ட கருத்து ஐரோப்பா எங்கும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்தக் கருத்தில் இப்போதும் உறுதியாக நிற்கிறாரா என்று எக்கனமிஸ்ட் சஞ்சிகை அவரிடம் கேள்வி எழுப்பியது.


"நான் எதனையும் நிராகரிக்க மாட்டேன்.

எனென்றால் எதனையுமே நிராகரிக்காத ஒருவரையே நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்" என்று அவர் பதிலளித்திருக்கிறார்.


"என்னிடம் ஒரு தெளிவான மூலோபாய நோக்கம் உள்ளது: உக்ரைனில் ரஷ்யா வெற்றிபெற முடியாது" என்று மக்ரோன் கூறினார்.


 “உக்ரைனில் ரஷ்யா வெற்றி பெற்றால், ஐரோப்பாவில் பாதுகாப்பு இருக்காது.

ரஷ்யா அங்கேயே(உக்ரைனுடன்) நின்றுவிடும் என்று யாரால் பொய்யாக நம்ப முடியும்? அதன் பின்னர் ஏனைய அண்டை நாடுகளான மோல்டோவா,  ருமேனியா, போலந்து, லித்துவேனியா மற்றும் ஏனைய பிற நாடுகளின் பாதுகாப்பு எப்படி இருக்கும்?" 


-இவ்வாறு மக்ரோன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

02-05-2024


0 comments

Comentários


You can support my work

bottom of page