சுவிஸ் மாநாட்டில்
அதிபர் மக்ரோன்
பேச்சுக்குப் புடின்
கடும் நிபந்தனை
பாரிஸ், ஜூன் 16
உக்ரைன் போரில் அமைதி என்பது அந்த நாட்டின் "சரணாகதியாக" இருக்க முடியாது.
-இவ்வாறு சுவிற்சர்லாந்தில் நடைபெற்றுவருகின்ற அமைதி மாநாட்டில் பிரான்ஸின் அதிபர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் போருக்கு நிலையான அமைதித் தீர்வு ஒன்றை எட்டும் நோக்குடன் முக்கிய நாடுகள் உட்பட 90 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் சுவிஸ் மாநாட்டில் ஒன்று கூடியுள்ளனர். சுவிஸ் அல்ப்ஸில் லூசேர்ண் ஏரிக்கரையோரம் ஆடம்பர விடுதிப்பகுதி ஒன்றில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகிய இந்த அமைதிக்கான மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கியும் கலந்துகொள்கின்றார். ஆனால் போரில் ஒரு தரப்பாகிய ரஷ்யா அந்த மாநாட்டில் பங்குபற்றவில்லை.
மாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய மக்ரோன் -
“நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். உங்களில் பலர் குறிப்பிட்டுள்ளபடி, அத்தகைய அமைதி உக்ரைனின் சரணாகதியாக இருக்க முடியாது, இந்தப் போரில் ஓர் ஆக்கிரமிப்பாளரும் பாதிக்கப்பட்டவரும் என இரண்டு தரப்புக்கள் மட்டுமே உள்ளன "
-என்று தெரிவித்தார்.
சுவிஸில் உக்ரைனுக்கான அமைதி மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னராக
நிபந்தனைகளுடன் கூடிய போர்நிறுத்த யோசனை ஒன்றை ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்டிருந்தார். அதில் -
உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நான்கு மாவட்டங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை மீளப் பெற வேண்டும் -
அத்துடன் நேட்டோ அமைப்பில் இணையப் போவதில்லை என்று உக்ரைன் உறுதியளிக்க வேண்டும்-
இந்த இரண்டு நிபந்தனைகளையும் கீவ் ஏற்றுக்கொண்டால் போரை நிறுத்திவிட்டுச் சமாதானப் பேச்சுக்களைத் தொடங்குவதற்கு மொஸ்கோ ஆயத்தமாக உள்ளது.
இவ்வாறு புடின் கடும் நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். உக்ரைன் அரசு புடினின் அறிப்பை அமைதிமுயற்சி அல்ல, சரணடையக் கோருகின்ற அறிவிப்புத்தான் அது என்று தெரிவித்து உடனடியாகவே அதனை அடியோடு நிராகரித்துவிட்டது.
சுவிஸில் நடைபெறும் அமைதி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தலைவர்கள் பலரும் புடினின் நிபந்தனைகளைக் கடுமையாக விமர்சித்துக் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.
அதேசமயம் உக்ரைன் போர் ஆரம்பித்த பின்னர் உலகெங்கும் முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களை உக்ரைனுக்கு உதவுகின்ற நிதியாக மாற்றுவது என்ற ஜீ7 தலைவர்களது மாநாட்டின் தீர்மானத்தை சுவிஸ் மாநாட்டில் கலந்துகொள்கின்ற சில நாடுகளது பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
16-06-2024
Comments