▪️மேற்கிற்கு ரஷ்யா பதிலடி
புதிய ரக ஏவுகணையால்
உக்ரைனைத் தாக்கியது!
▪️போலந்தில் உள்ள அமெ. தளம்
மொஸ்கோவின் குறியாகலாம்
▪️தூதரகங்கள் மூடப்படுவதால்
தலைநகர் கீவ் மக்கள் அச்சம்
தாஸ்நியூஸ் செய்திச் சேவை
பாரிஸ், நவம்பர் 23
ஒரு வார காலத்தில் உக்ரைன் போர் நிலைமை மிக உச்சமான கட்டம் ஒன்றை எட்டியுள்ளது. அமெரிக்காவில் அதிகார மாற்றம் நிகழ்வதற்கு உள்ள குறைந்த கால அவகாசத்தில் உக்ரைன் தரப்பின் கைகளை ஓங்கச்செய்துவிட ஜோ பைடனும் நேட்டோ அணியும் விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அது போரில் பெரும் விரிவாக்கத்தை ஏற்படுத்தி ஐரோப்பா அளவில் பதற்றநிலைமையைத் தோற்றுவித்துள்ளது.
பதவிக்கு வந்தால் உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் நிறுத்துவேன் என்று ட்ரம்ப் தேர்தல் பிரசாரங்களில் வாக்குறுதி அளித்திருந்தார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் இரு தரப்பையும் பேச்சு மேசைக்குக் கொண்டு வருவதற்கான அழுத்தத்தை
கடுமையாக்குவார் . அவ்வாறான ஒரு கட்டத்தில் தாங்கள் வலுவான நிலையில் சமரசத்துக்குச் செல்ல இரு தரப்பும் அவசரப்படுவது தெரிகிறது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவின் பிறயன்ஸ்க் (Bryan's) மற்றும் குர்ஸ்க் (Kursk) பிராந்தியங்கள் மீது உக்ரைன் நடத்தியுள்ள தாக்குதல்களுக்குப் பின்னரான நிலைவரம் குறித்து அதிபர் விளாடிமிர் புடின் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருக்கிறார்.
அரிதான அந்த உரையில் அவர், தற்போதைய மோதல் "உலகளாவிய தன்மைக்கு மாறுகிறது" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். உக்ரைன் எந்தெந்த நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துகிறதோ அந்த நாடுகளில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கும் உரிமை ரஷ்யாவுக்கு உள்ளது என்றும் எச்சரித்திருக்கிறார்.
அமெரிக்கா தனது நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவைத் தாக்குவதற்குப் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து உக்ரைன் போர் ஆபத்தானதொரு கட்டத்துக்கு விரிவடைந்துள்ளது.
அதற்குப் பதிலடியாக ரஷ்யா கடந்த வியாழனன்று புதிய வகைக் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்கியிருந்தது.
அது புதிய ஆயுதம் ஒன்றின் மூலமான பரீட்சார்த்தத் தாக்குதலாக தெரிகிறது.
இரண்டு தினங்களுக்குப் பின்னர் படைத் தளபதிகளுடனான ஒரு சந்திப்பில் அந்த ஏவுகணை பற்றிப் புடின் விவரித்திருக்கிறார்.
ஒலியின் வேகத்தை விடப் பத்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய "ஓரேஷ்னிக் ஹிப்பர்சோனிக் ஏவுகணையை" (Oreshnik hypersonic missiles) அது என்ற தகவலை அவர் வெளியிட்டிருக்கிறார்.
தாக்குதல் நடந்த இடத்தில் சாட்சிகள் வெளியிட்ட தகவலின்படி, அது ஒரு புதிய வகை ஆயுதம் என்றும் சுமார் மூன்று மணி நேரங்கள் வெடித்து எரிந்தது என்றும் கூறியிருக்கின்றனர்.
இது போன்ற பெருந்தொகை ஏவுகணைகள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன. மோதல் நிலைமை ஒன்றின் போது ரஷ்யா இவற்றைப் பயன்படுத்தும் என்றும் அதிபர் புடின் கூறியிருக்கிறார்.
புடினின் இத்தகைய மிரட்டல்களை வழமையான பாணி என்று மேற்குலக ராஜதந்திரிகள் சிலர் குறிப்பிட்டுள்ள போதிலும் ஐரோப்பாக் கண்டம் தழுவிய போர் வெடிப்பதற்கான சாத்தியங்கள்
மிக உச்சத்தில் உள்ளன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
🔴போலந்து ஏவுகணைத் தளம்
போலந்தின் பால்டிக் கடற்கரையோரம் உள்ள ரெட்சிக்கோவோ (Redzikowo)
என்ற நகரில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பாலிஸ்ரிக் ஏவுகணைப் பாதுகாப்புத் தளம் (US ballistic missile defence base) கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்ய ஏவுகணைகளில் இருந்து ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கான கவசம் எனக் கருதப்படுகின்ற இந்தத் தளம், அணு ஆயுத மோதலுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்துள்ளது என்று மொஸ்கோ குற்றம் சுமத்தி உள்ளது. அழிக்கப்படவேண்டிய பிரதான இலக்குகளின் பட்டியலில் அதனைச் சேர்த்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
போலந்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் இதனால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, வான் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக உக்ரைன் தலைநகராகிய கீவில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதரகம் உட்பட சில மேற்கு நாட்டுத் தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. இது அந்த நகர மக்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.
நகரில் வான் தாக்குதல் நடப்பது வழக்கமான ஒன்று.. ரஷ்யாவின் உளவியல் போரினால் வீணாக அச்சமடையாதீர்கள் என்று உக்ரைன் அரசு தலைநகர மக்களுக்குத் தென்பூட்டியுள்ளது.
⚫தொடர்புடைய செய்தி :https://www.thasnews.com/post/ந-ண-ட-த-ர-ஏவ-கண-கள-ல-ரஷ-ய-வ-த-த-க-க-அம-ர-க-க-அன-மத
தாஸ்நியூஸ் - பாரிஸ்
23-11-2024
Comments