top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

உக்ரைன் மண்ணுக்கு வருகின்ற பிரெஞ்சுப் படைவீரர்களை சவப்பெட்டியில் அனுப்புவோம்!

"அணுகுண்டு பாரிஸுக்குச்

செல்ல இரு நிமிடம் போதும்.. "


ரஷ்ய சபாநாயகர்

மிரட்டல் கருத்து


பாரிஸ், மார்ச் 21


உக்ரைன் மண்ணுக்கு வருகின்ற பிரெஞ்சுப் படைவீரர்கள் அனைவரையும் கொல்வோம். அவர்களை மூவர்ணக் கொடி போர்த்திய சவப்பெட்டிகளில் ஓர்லி விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பி வைப்போம். அது பிரெஞ்சு மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது.


-ரஷ்ய நாடாளுமன்றமாகிய டூமாவின் துணைத் தலைவரும் அதிபர் புடினுக்கு மிக நெருக்கமான அரசியல் புள்ளியுமாகிய பியோட்டர் ரோல்ஸ்ரோய் (Pyotr Tolstoy) மேற்கண்டவாறு நேர்காணல் ஒன்றில் மிரட்டல் விடுத்திருக்கிறார்.


பாரிஸ் நகருக்கு அணுகுண்டு வீசுவது பற்றியும் அவரது கருத்து வெளியாகி இருக்கிறது."நாங்கள் கணக்குப்பார்த்து வருகின்றோம். ரஷ்யாவில் இருந்து ஏவப்படும் ஒரு பொருள் பாரிஸை இரண்டு நிமிடங்களுக்கும் சற்று அதிக நேரத்தில் சென்றடைந்து விடும்"-என்று கூறி அவர் மிரட்டியிருக்கிறார்.


பிரான்ஸின் BFM தொலைக்காட்சி அவரது நேர்காணல் பற்றிய செய்தியை இன்று வெளியிட்டிருக்கின்றது.


"மக்ரோனையோ அவரது கருத்தையோ நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். அவரது வரம்புகளை நாங்கள் கணக்கில் எடுக்கப் போவதில்லை. உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் மூவர்ணக் கொடி போர்த்திய சவப்பெட்டிகளிலேயே போய் முடியும். பிரெஞ்சு மக்களே...! நீங்கள் உங்கள் படையினரோடு ஒடிசாவுக்கு வந்தால் அதன் மூலம் மூன்றாம் உலக யுத்தத்தை தூண்டியவர்களாவீர்கள்.. அவ்வளவுதான்..."


-இவ்வாறு பியோட்டர் ரோல்ஸ்ரோய்

BFM தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். முன்னாள் பத்திரிகையாளராகிய அவர் பிரான்ஸில் தனது உயர்கல்வியைத்

தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.


போரில் ரஷ்யாவின் வெற்றியைத் தடுத்து நிறுத்துவதற்காக அவசியம் ஏற்பட்டால் ஐரோப்பியத் தரைப் படையை உக்ரைனுக்கு அனுப்பும்

தெரிவை புறந்தள்ள முடியாது என்று அதிபர் மக்ரோன் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலடியாகவே மொஸ்கோவில் இருந்து முக்கிய அரசியல் பிரமுகரது இந்த மிரட்டல் வந்திருக்கிறது.


நாம் விரும்பாவிட்டாலும் உக்ரைனுக்குத் தரைப் படைகளை அனுப்ப வேண்டிய அவசியம் விரைவில் ஏற்படலாம் - என்று

மக்ரோன் திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். அவரது இந்த நிலைப்பாடு மொஸ்கோவுக்கும் பாரிஸுக்கும் இடையே கடும் கொந்தளிப்பான அரசியல் நிலைவரத்தைத் தோற்றுவித்துள்ளது.


இதனிடையே -


உக்ரைனின் துறைமுக நகரமாகிய ஒடிசாவுக்கு இரண்டாயிரம் பிரெஞ்சு வீரர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர் என்ற தகவலை ரஷ்யப் புலனாய்வு சேவையினர் வெளியிட்டிருக்கின்றனர்.

அந்தத் தகவலை பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு நிராகரித்து மறுத்துள்ளது.


அதிபர் மக்ரோன் அண்மையில் எலிஸே மாளிகையில் செய்தியாளர்களுடன் ஒலிவாங்கி ஏதும் இன்றித் தனிப்பட்ட ரீதியில் உரையாடிய சந்தர்ப்பம் ஒன்றின் போது "இந்த ஆண்டு முடிவதற்குள் எங்கள் ஆட்களை ஒடிசாவுக்கு அனுப்பவேண்டி வரலாம்" என்றவாறு பிரெஞ்சுப் படைகளை அனுப்புவது பற்றிச் சாடைமாடையாகப் பேசியிருந்தார் என்ற தகவலைப் பிரான்ஸின் "லு மொன்ட்" பத்திரிகை நிறுவனம் வெளியிட்டிருந்தது.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

21-03-2024



0 comments

Comments


You can support my work

bottom of page