top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

உக்ரைனில் தரை நடவடிக்கை அவசியமாகலாம் எந்த நிலைமைக்கும் தயாராக இருப்பதே எங்கள் நோக்கம்!

"ரஷ்யா பெரும் சக்தியல்ல!!"

பேர்ளினில் இருந்து திரும்பிய

வழியில் மக்ரோன் தெரிவிப்பு


பாரிஸ், மார்ச் 17


"எனக்கு அதில் விருப்பமில்லை. நான் அதை ஆரம்பித்து வைக்கவும் விரும்பவில்லை. ஆனாலும் ஒரு கட்டத்தில் ரஷ்யப் படைகளை எதிர்கொள்வதற்கான தரை நடவடிக்கைகள் உக்ரைனில் அவசியமாகலாம்.எல்லாவற்றுக்கும் பிரான்ஸ் தயாராகவே இருக்கிறது

அதை எம்மால் செய்ய முடியும் என்பதுதான் பிரான்ஸின் பலம்.. "


-அரசுத் தலைவர் மக்ரோன் இவ்வாறு

மீண்டும் எச்சரிக்கைத் தொனியில் கூறியிருக்கிறார்.


உக்ரைனுக்கு உதவுவதற்கான உத்திகளில் முரண்பாடுகளைக் களைவதற்காக பேர்ளினுக்குச் சென்றிருந்த அவர், அங்கு ஜேர்மனி, போலந்து நாட்டுத் தலைவர்களுடன் முக்கிய மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு

வெள்ளிக்கிழமை பாரிஸ் திரும்பினார்.

அச்சமயத்தில் விமானத்தில் பரீஷியன் செய்தியாளரோடு உரையாடியபோதே

மேற்கண்ட எச்சரிக்கையை அவர் விடுத்திருக்கிறார்.


".. நாம் ஒரு பெரிய சக்தியை எதிர்கொள்ளவில்லை. ரஷ்யா அணு ஆயுதங்களைக் கொண்ட ஒரு நடுத்தர சக்தியாகும், ஆனால் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐரோப்பியர்களை விட மிகக் குறைவு, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றை விட குறைவாக உள்ளது" என்றும் மக்ரோன் நினைவு கூர்ந்தார்.


ரஷ்யாவின் வெற்றியைத் தடுப்பதற்கு

ஐரோப்பியத் தரைப்படைகளை அனுப்புவது என்ற கருதுகோளை ஜேர்மனி முற்றாக நிராகரித்து வருகிறது. அதனாலேயே மக்ரோன் அவசரமாக பேர்ளின் சென்று சான்சிலர் ஓலாஃப் சோல்ஸுடன் சந்திப்பை மேற்கொண்டார்.

படம் :பேர்ளினில் மக்ரோன், சோல்ஸ் மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் ரஸ்க்----


உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெற்றிவாய்ப்பைத் தடுத்துநிறுத்துவதற்காக அங்கு

நேரடியாகப் படைகளை அனுப்பி இராணுவ ரீதியில் தலையிடவேண்டி வரும் என்பதை மக்ரோன்

சமீபகாலமாகத் திரும்பத் திரும்பக் கூறிவருகிறார்.


உக்ரைன் மண்ணில் ஐரோப்பியத் தரைப் படைகளை இறக்குவதற்கான

வாய்ப்பை நிராகரித்துவிட முடியாது என்ற சாரப்பட கடந்த மாதம் அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் அவரது ஐரோப்பிய, நேட்டோ அணி நாடுகளினது தலைவர்களாலேயே

உடனடியாக மறுக்கப்பட்டிருந்தன.

ஆயினும் போர்க்கள நிலைமைகள் ரஷ்யாவுக்குச் சாதகமாக மாறும் நிலைவரத்தைக் காட்டுவதால் முக்கிய ஐரோப்பிய நாடுகள் இது விடயத்தில் விழிப்படையத் தொடங்கியுள்ளன.


ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. அதிபர் மக்ரோன் அந்தத் தேர்தலுக்கான ஒரு அரசியல் பிரசார யுக்தியாகவே

ஐரோப்பிய நாடுகளை ஒருசேரப் பலப்படுத்தும் விதமாக உக்ரைனில் படைகளை இறக்கி இராணுவ ரீதியில் தலையிடும் கதைகளை அவிழ்த்துவிட்டு

வருகிறார் என்று உள்நாட்டில் அவரது அரசியல் போட்டியாளர்கள் விமர்சிக்கின்றனர். ஆயினும் தனது உக்ரைன் கொள்கை நிலைப்பாட்டை மக்ரோன் இவ்வாறு திடீரெனத் தீவிரமாக்கத்தொடங்கியிருப்பற்குப் பின்னால் "பல முக்கிய செய்திகள் மறைந்துள்ளன" என்று பாதுகாப்புத் துறை சார்ந்த அவதானிகள் சிலர் கருதுகின்றனர்.


இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடிக்கின்ற போரில் ஆளணி மற்றும்

ஆயுதக் கையிருப்பு போன்றவற்றில் நலிவடைந்துவிட்ட உக்ரைனின் படைகளால் இனிமேல் தனித்து ரஷ்யாவை எதிர்கொள்ள முடியாது என்ற கட்டம் நெருங்கிவருவது தெரிகிறது-


இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தலில்

அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்து டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வர நேர்ந்தால், அது ரஷ்யாவின் புடினுக்குச் சாதகமான சர்வதேச நிலைவரத்தை ஏற்படுத்தும். அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற அவர் அதன் பிறகு ஐரோப்பிய எல்லைகளை நோக்கிப் போரைத் தீவிரப்படுத்த முனையக் கூடும் என்று ஐரோப்பிய வல்லுநர்கள் நம்புகின்றனர்-


இவைபோன்ற பூகோள, களநிலை மாற்றங்களினால் ரஷ்யாவைத் தனித்து எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களைச் செய்ய வேண்டிய அவசரம் ஐரோப்பாவுக்கு ஏற்பட்டுள்ளது.


⚫தொடர்புடைய செய்திகள்



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

17-03-2024





0 comments

Comments


You can support my work

bottom of page