டேவிற் கமரோனின்
கருத்துக்குப் பதிலடி
அணு ஆயுதப் போர்ப் பயிற்சி
விரைவில் என்றும் அறிவிப்பு
பாரிஸ், மே 6
உக்ரைன் படைகள் பிரிட்டிஷ் ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்குள் தாக்குதல்களை நடத்துமாயின் உக்ரைனுக்குள்ளேயும் வெளியேயும் பிரிட்டிஷ் ஆயுத நிலைகள் மற்றும் தளபாடங்கள் மீது
தாக்குதல் நடத்தப்படும்.
-ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு எச்சரித்திருக்கிறது.
பிரிட்டிஷ் அரசு வழங்குகின்ற நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை ரஷ்யாவின் எல்லைக்குள் பயன்படுத்தலாம். அது உக்ரைனின் முடிவைப் பொறுத்தது-என்ற சாரப்பட
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிற் கமரோன் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே மொஸ்கோ இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
இதேவேளை, ரஷ்யா மிக விரைவில் உக்ரைனுக்கு அருகே தந்திரோபாய அணு ஆயுதப் (Tactical nuclear weapons) போர்ப் பயிற்சியை நடத்தும் என்று அதிபர் விளாடிமிர் புடின் இன்று
அறிவித்திருக்கிறார். மேற்கு நாடுகளிடமிருந்து வருகின்ற அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கின்ற விதமான ஒரு நடவடிக்கை இது என்று தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் தேர்தலில் வெற்றியீட்டிய புடின், அடுத்த ஐந்தாவது தவணைக் காலத்துக்கு அதிபராகப் பதவியேற்கின்ற வைபவம் மொஸ்கோவில் வியாழக்கிழமை பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள நேரத்திலேயே அணு ஆயுதப் போர்ப் பயிற்சி பற்றிய அவரது அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
உக்ரைனுக்குத் தரைப் படைகளை அனுப்புவது என்று அதிபர் மக்ரோன் திரும்பத் திரும்ப வெளியிட்டு வரும் கருத்துகளுக்கும், உக்ரைன் போரில்
நேட்டோ நாடுகளது தலையீடுகள் அதிகரித்து வருவதற்கும் பதிலளிக்கும் விதமாகவே இந்த அணு ஆயுதப் போர்ப் பயிற்சி ஒத்திகை நடத்தப்படவுள்ளது என்று மொஸ்கோவில் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரெஞ்சு அதிபர் மக்ரோன், பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிற் கமரோன் இருவரும் அண்மையில் வெளியிட்டிருக்கின்ற கருத்துக்கள் போரில் புதியதொரு விரிவாக்கத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்று கிரெம்ளின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) கூறியிருக்கிறார். உக்ரைனுக்கு பிரெஞ்சுப் படைகளை அனுப்புவது என்று மக்ரோன் வெளியிட்ட கருத்து ரஷ்யாவுடன் நேரடியான மோதலுக்குப் பாரிஸ் ஆயத்தமாகுவதாகவே அர்த்தம் கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பிரான்ஸ், பிரிட்டிஷ் இரு நாடுகளினது தூதர்களும் வெளிவிவகார அமைச்சுக்கு நேரில் அழைக்கப்பட்டனர். அவர்களிடம் மொஸ்கோ தனது கடும்
கண்டனத்தை வெளியிட்டிருக்கிறது.
இதேவேளை -
உக்ரைன் போரை நிறுத்துவதற்கு பீஜிங் ரஷ்யா மீது தனது முழுச் செல்வாக்கைச் செலுத்த வேண்டும்
என்று அதிபர் மக்ரோனும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன்(Ursula von der Leyen) ஆகிய இருவரும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
சீனா-பிரான்ஸ் இடையே ராஜீக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு அறுபது ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாகப் பாரிஸ் வந்துள்ள சீன அதிபர் ஷீ ஜின்பிங்கிடமே (Xi Jinping)
அவர்கள் இருவரும் நேரில் இதனைத் தெரிவித்தனர். சீன அதிபருக்கு இன்று எலிஸே மாளிகையில் அரச வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று பகல்ப் பொழுது முழுவதும் சீன அதிபருடன் இடம்பெற்ற முக்கிய பேச்சுக்களில் மக்ரோனுடன் உர்சுலா வொன் டெர் லேயனும் உடன் பங்கேற்றிருந்தார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
06-05-2024
Yorumlar