top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

உலக அழகியாக டென்மார்க் யுவதி

மெக்ஸிக்கோவில் நடந்த

கண்கவர் விழாவில் தெரிவு

பாரிஸ், நவம்பர் 17


டென்மார்க் நாட்டின் அழகி விக்டோரியா கேயர் ஹெல்விக்(Victoria Kjaer Theilvig) 2024 ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.


கடந்த ஆண்டு உலக அழகியாகத் தெரிவாகி இருந்த நிக்கரகுவா நாட்டின் அழகியான 24 வயது ஷெய்னிஸ் பலாசியோஸ்(Sheynnis Palacios) தனது கிரீடத்தை டெனிஷ் அழகி விக்டோரியாவுக்கு அணிவித்தார்.


73 ஆவது உலக அழகித் தெரிவுப் போட்டிகள் மெக்ஸிக்கோவில் நடைபெற்றுவந்தன. தலைநகர் மெக்ஸிக்கோ சிற்றியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இறுதிச் சுற்றிலேயே 21 வயதான டெனிஷ் அழகி உலக அழகிக்கான கிரீடத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் நடனக் கலைஞர், அழகுக் கலை முயற்சியாளர் , மனநல ஆலோசகர், சட்டவாளர் போன்ற பல துறைகளில் அறியப்படுகின்ற இளம் அழகி விக்டோரியா, டென்மார்க்கில் இருந்து உலக அழகி பட்டத்தை வெல்லும் முதல் பெண் என்ற பெருமையையும் பெறுகிறார். "இந்தத் தருணத்துக்காக என் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்" என்று வெற்றியீட்டிய பின்னர் அவர் கூறினார்.

இறுதிச் சுற்றில் நைஜீரியா நாட்டின் அழகி சித்திம்மா அடேற்ஷினாவை (Chidimma Adetshina) விக்டோரியா தோற்கடித்தார். அதேசமயம் மெக்ஸிக்கோ அழகி மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் (Maria Fernanda Beltran) மூன்றாவது இடத்தைத் தனதாக்கினார். தாய்லாந்து, பொலீவியா, வெனிசுலா, ஆர்ஜென்டினா, போர்ட்டோரிக்கோ, ரஷ்யா, சிலி, கனடா மற்றும் பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் முதல் 12 இடங்களுக்குள் வந்தனர்.

2023 இல் பிரான்ஸின் அழகியாகத் தெரிவாகிய இந்திரா அம்பியோட்டும் (Indira Ampiot) இந்த உலகப் போட்டியில் பங்கேற்றிருந்தார். எனினும் முதல் முப்பது இடங்களுக்குள்ளேயே அவரால் முன்னேற முடிந்தது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

17-11-2024


0 comments

Comments


You can support my work

bottom of page