தொடக்க விழாவுக்கான
ஏற்பாடு யாவும் நிறைவு
இந்திய வீரர்கள் 10 பேரும்
காவல் கடமைக்கு வருகை
படம் :இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பாதுகாப்புக் கடமைக்காக விசேட பயிற்சி பெற்ற நாய்களுடன் பாரிஸ்
வந்துள்ள கே 9(K9 team) படை வீரர்கள்...
பாரிஸ், ஜூலை 23
உலகின் கண்கள் பாரிஸ் மீது திரும்பியுள்ளன. எதிர்பார்ப்பும் பரபரப்பும் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. ஒலிம்பிக் போட்டிகளின் கோலாகலத்
தொடக்க விழா பாரிஸ் செய்ன் நதி மீது வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஒலிம்பிக் குழுக்கள் பாரிஸ் நகரை வந்தடையத் தொடங்கியுள்ளன.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகவும் தனித்துவமானதாக அமையும் என்று வர்ணிக்கப்படுகின்ற அதன் ஆரம்ப விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட பூர்த்தியாகி விட்டன என்று பாரிஸ் பொலீஸ் தலைமை ஆணையாளர் லோரோன் நுயூனேஸ் (préfet de police de Paris Laurent Nunez) தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கண்கவர் படகுகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ள செய்ன் நதியின் முக்கிய பகுதிகள் இறுக்கி மூடப்பட்டுத் தீவிர பாதுகாப்பு வலயமாகப் பேணப்படுகின்றது. அங்கு உள்ளே சென்றுவருவதற்கான கியூஆர் கோட் பாஸ் முறை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
45 ஆயிரம் பொலீஸ் மற்றும் ஜொந்தாமினர்களும் 18 ஆயிரம் ராணுவ வீரர்களும் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பாதுகாப்பு வழங்கவுள்ளனர். இதனைவிட சிறப்புப் படைப் பிரிவுகள் பலவும் சேவையில் இணைந்துள்ளன. ஐரோப்பிய அயல் நாடுகள் உட்பட நாற்பது நட்பு நாடுகளில் இருந்து ஆயிரத்து 750 வெளிநாட்டுப் படையினரும் சிறப்புக் குழுக்களாகப் பாரிஸ் வந்துள்ளனர்.
நகரின் மூலை முடுக்கு எங்கும் பொலீஸ் மற்றும் இராணுவத்தினரது ரோந்துகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
பொதுப் போக்குவரத்துகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
செய்ன் நதிக் கரையோரமாக உள்ள உயர்ந்த கட்டடங்களின் உச்சிகளில் குறிபார்த்துச் சுடும் படை அணிகள் நிலைகொண்டுள்ளன. கண்ணிகள், வெடிகுண்டுகளை அகற்றும் படை, பக்ரீரியா மற்றும் இரசாயன அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடும் நிபுணத்துவப் படை அணிகள், மோப்ப நாய் அணிகள்
என்பன அங்கு தயார் நிலையில் உள்ளன. கோவிட் வைரஸ் தொற்றுப் போன்ற சுகாதார நிலைமைகளை எதிர்கொள்வதற்காகப் பாரிஸ் மருத்துவமனைகளிலும் முழு உஷார் நிலை பேணப்படுகின்றது.
தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்கு ஆரம்பமாவதற்கு முன்பாகப் பாரிஸ் வான் பரப்பில் சர்வதேச விமானப் பறப்புகள் அனைத்தும் தடைசெய்யப்படும். ட்ரோன்களைப் பறக்க விடுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் மிக உச்சமாக உள்ள ஒரு சமயத்தில் ஒலிம்பிக் போட்டிகளைத் திட்டமிட்டவாறு நடத்தி முடிப்பதில் பிரான்ஸ் பெரும் பாதுகாப்புச் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. போட்டிக் காலத்தில் அதனைக் குழப்பும் நோக்குடன் நடத்தத் திட்டமிட்டிருந்த தாக்குதல் சதித் திட்டங்கள் பலவற்றை உளவுத் துறையினர் கண்டுபிடித்து முறியடித்து விட்டனர் என்று அரசு தெரிவித்துள்ளது.
காபந்து அரசின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா, ஒலிம்பிக் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலீஸார் மற்றும் படை வீரர்களுக்குத் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றில் "உங்கள் கடமையின் இலக்கு மிகச் சவாலானது. முழு உலகமும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது."-என்று தெரிவித்திருக்கிறார்.
அதிபர் மக்ரோன் கடந்த திங்களன்று
பாரிஸ் புறநகரில் ஒலிம்பிக் கிராமம் அமைந்துள்ள பகுதிக்கு விஜயம் செய்தார். ஒலிம்பிக் போட்டிகளுக்குப் "பாரிஸ் ஆயத்தமாகி விட்டது" என்பதை அங்கு அவர் அறிவித்தார்.
செய்ன் நதித் தொடக்க விழா பற்றிக் குறிப்பிட்ட அவர், ஆரம்பத்தில் அது ஒரு சாத்தியமில்லாத - பைத்தியக்காரத்தனமான - திட்டமாகத் தோன்றியது. ஆனால் இப்போது அது தனித்துவமான ஒன்றாக, நடனம் நாட்டியம் என்று உலகக் கலைஞர்கள் அனைவருமே ஒன்று கூடுகின்ற ஒரு திறந்த நாடக அரங்கமாகப் பாரிஸை மாற்றியிருக்கிறது .பல வருட காலமாகப் பல்வேறு துறையினரதும் கடும் உழைப்பினாலேயே இந்த முயற்சி கனிந்து சாத்தியமாகியுள்ளது-என்று தெரிவித்தார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
23-07-2024
Comments