top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

உழவு வாகன அணி றான்ஜிஸ் சந்தையை நெருங்கியது! தடையை மீற முயன்ற எண்பது பேர் கைது!

குழப்பம் ஏற்பட வாய்ப்பு

பாரிஸ் நகருக்குத் தெற்கே றான்ஜிஸ் சர்வதேச உணவுச் சந்தைக் களஞ்சியத்தைக் கலவரத்தடுப்புக் கவச வாகனங்களுடன் பொலீஸார் காவல் புரிகின்ற காட்சி. படம் AFP

 

பாரிஸ், ஜனவரி 31


பாரிஸ் வல்-து-மானில் அமைந்துள்ள றான்ஜிஸ் சர்வதேச உணவுச் சந்தைக்குள் (marché de Rungis) பொலீஸ் தடையை மீறிக் கால் நடையாக நுழைய முயன்ற சுமார் எண்பது பேர் இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.


பாரிஸ் றான்ஜிஸ் சந்தையை முற்றுகையிடுவதற்காக நாட்டின்

தென்மேற்குப் பகுதி நகரில் இருந்து சில தினங்களுக்கு முன்பாகப் புறப்பட்ட சுமார் முந்நூறு ட்ராக்டர்கள் அடங்கிய விவசாயிகளது வாகனப் பேரணி, நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் தூரம் பல நகரங்களைக் கடந்து பயணித்து இன்று புதன்கிழமை பாரிஸ் பிராந்தியத்தின் எல்லையை வந்தடைந்துள்ளது.


வாகன அணி சந்தை அமைந்துள்ள றான்ஜிஸ் நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர்கள் தூரத்தில் தடைப்பட்டு நிற்கிறது என்று இன்று மாலை இந்தச் செய்தியை எழுதிய சமயத்தில் தகவல் கிடைத்தது. அதேசமயம் வாகனங்களில் இருந்து இறங்கிக் கால்நடையாக முன்னேறிய விவசாயிகள் அணி ஒன்று பொலீஸார் போட்டிருந்த தடைகளை மீறியவாறு சந்தையின் களஞ்சியப் பகுதி ஒன்றினுள் நுழைய முயற்சித்தது என்றும் - அவ்வாறு சேதம் விளைவித்தவாறு நுழைய முயன்றவர்களில் 79 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்றும் - பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாரிஸில் வசிக்கின்ற சுமார் 12 மில்லியன் மக்களுக்கான மரக்கறி மற்றும் உணவுப் பொருள்களை மொத்தமாக விநியோகிக்கின்ற இந்தச் சந்தை ஆரம்பம் முதலே விவசாயிகளது பிரதான இலக்காக இருந்து வருகிறது.

தலைநகர மக்களின் கவனம் முழுவதையும் உண்மையிலேயே தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டுமானால் றான்ஜிஸ் சந்தையைத் தொடர்ந்து சில நாட்கள் முடக்கி வைத்து அங்கிருந்து நடைபெறுகின்ற விநியோகங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது விவசாயிகளில் ஒரு பகுதியினரது விருப்பம் ஆகும்.


விவசாயிகளது நடவடிக்கைகளை மென்போக்குடன் அணுகுமாறு பொலீஸ் மற்றும் ஜொந்தாம் படைகளுக்கு உள்துறை அமைச்சர் ஏற்கனவே உத்தரவு விடுத்துள்ளார். எனினும் றான்ஜிஸ் சந்தை, விமான நிலையங்கள் மற்றும் பெரு நகரங்களுக்குள் ட்ராக்டர்களுடன் நுழைய முற்படுவது "சிவப்புக் கோட்டைத் தாண்டும்" செயலாகக் கருதப்படும் என்றும் அத்தகைய முயற்சிகளைத் தடுத்து நிறுத்துமாறு சட்டம் ஒழுங்கைப் பேணுகின்ற அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் - உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

றான்ஜிஸ் சந்தையை நோக்கிய தங்களது முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விவசாயிகள் பொலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் வியாழக்கிழமை மீண்டும் ட்ராக்டர்கள் சகிதம் ஏ6 ஓட்டோறூட் வீதி வழியே சந்தைப் பகுதிக்குள் நுழைய முற்படக்கூடும் என்றும் அதனால் அங்கு பெரும் குழப்ப நிலை உருவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக CRS படையின் இருபது அணிகள் (20compagnies de CRS) நாளை வியாழக்கிழமை கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.


பிரதமர் கப்ரியேல் அட்டால் விவசாயிகளுக்கான மேலும் பல திட்டங்களை நேற்றைய தினம் தனது கொள்கைப் பிரகடன உரையின் போது வெளியிட்டிருக்கிறார். விவசாயிகளது சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுக்களையும் நடத்தி வருகிறார். எனினும் நாடெங்கும் விவசாயிகளது சீற்றம் வீதி மறியல்கள் மற்றும் வாகனப் பேரணிகளாகத் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

31-01-2024


0 comments

Comments


You can support my work

bottom of page