top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

உழவர்கள் மீண்டும் வாகனப் பேரணி! வீதி மறியல் போர்!!

வியாழனன்று விமானிகள்

பணி நிறுத்தப் போராட்டம்


பாரிஸ், நவம்பர் 12


இலையுதிர்காலம் நாடு பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களைச் சந்திக்கவுள்ளது. சுமார் ஓராண்டு காலத்தின் பின்னர் நாட்டின் விவசாயிகளும் பண்ணையாளர்களும்

மறுபடியும் வீதிக்கு இறங்கிப் போராட்டம் நடத்தவுள்ளனர்.


தங்களது அடையாளப் போராட்டங்கள் இந்த மாத நடுப்பகுதியில் இருந்து ஆரம்பமாகும் என்று மிகப் பெரிய விவசாயிகள் தொழிற்சங்கமாகிய FNSEA அமைப்பும் இளம் விவசாயிகள் சங்கமும் (Jeunes Agriculteurs - JA)கூட்டாக அறிவித்திருக்கின்றன.


இம்முறை கோதுமை அறுவடை பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் பண்ணை விலங்குகள் மத்தியில் தொற்றுநோய்கள் பரவிப் பேரிழப்புகளை ஏற்படுத்திவருகின்றன.

இதனால் விவசாயிகளும் பண்ணையாளர்களும் அரசிடம் இருந்து அரச உத்தரவாதத்துடனான கடன் உதவிகளை எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் செய்துகொள்ளவுள்ள விவசாய வர்த்தக உடன்படிக்கை உள்ளூர் விவசாயிகளைச் சீற்றமடையச் செய்துள்ளது.


லத்தீன் அமெரிக்க நாடுகளான ஆர்ஜென்ரீனா, பிறேசில் உருகுவே, பராகுவே மற்றும் பொலீவியா போன்ற னவற்றுடன் ஐரோப்பிய ஒன்றியம் கைச்சாத்திட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தங்களை நேரடியாகப் பாதிக்கும் என்று தெரிவித்துப் பிரான்ஸின் விவசாயத் துறையினர் அதனை கடுமையாக எதிர்க்கின்றனர்.


தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவே அவர்கள் நவம்பர் 15 வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாளப் பேரணியை நடத்தவுள்ளனர்.

நவம்பர் 14


தேசிய விமானிகள் தொழிற்சங்கமும் நவம்பர் 14 ஆம் திகதி பாரிஸில் நாடாளுமன்றத்தின் முன்பாக எதிர்ப்புப் பேரணி ஒன்றுக்கும் அதனைத் தொடர்ந்து பணிப் புறக்கணிப்புக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது. விமானப் போக்குவரத்து சேவைகள் மீது வரிகளை அதிகரிக்கின்ற பிரேரணை மீது நாளுமன்றம் வாக்களித்திருப்பதை அடுத்தே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விமானிகள் வீதிக்கு இறங்குகின்றனர். விமானப் போக்குவரத்து சேவைகளுடன் தொடர்புடைய ஏனைய தொழிலாளர் சங்கங்களையும் தங்களது போராட்டத்தில் இணையுமாறு விமானிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


அரசு அதன் வரவு செலவுத் திட்டத்தை ஈடுகட்டுவதற்காக விமான சேவைகள் மீதான வரிகளை அதிகரித்தமை விமானத் துறை மீதான நேரடியான ஒரு தாக்குதல் என்று விமானிகள் தொழிற்சங்கம் கண்டித்துள்ளது.

நவம்பர் 21


நாட்டின் தேசிய ரயில்வே நிறுவனமாகிய SNCF கம்பனியின் தொழிலாளர் சங்கங்கள் கூட்டாக முன்னெடுக்கும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நவம்பர் 21 ஆம் திகதி

இடம்பெறவுள்ளது. SNCF இன் ஓர் உப நிறுவனமாகிய சரக்கு ரயில் சேவைகளை உள்ளடக்கிய Fret SNCF ஐ

தனியாமயமாக்குவதை எதிர்த்து டிசெம்பர் மாதம் முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதற்கு முன்னராக எதிர்வரும் 21 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் இடம்பெறவுள்ளது.



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

12-11-2024

0 comments

コメント


You can support my work

bottom of page